
சென்னை, நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன், "வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. சென்னையில் இருந்து 430 கி.மீ. கிழக்கு தென் கிழக்கு திசையில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 420 கி.மீ. கிழக்கு தென் கிழக்கு திசையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
காரைக்கால்- ஸ்ரீஹரி கோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே தாழ்வு மண்டலம் நாளை (11/11/2021) கரையைக் கடக்கும். நாளை (11/11/2021) மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகி விடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும். இந்த நான்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இன்றிரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யக்கூடும். கடலூர், புதுச்சேரிக்கு அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதிகபட்சமாக எண்ணூரில் 5 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.