/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/book-pub-art.jpg)
48ஆவது சென்னைப் புத்தகக்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 27/12/2004 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணி அளவில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த புத்தகக்காட்சி 12/01/2025 வரை நடைபெற உள்ளது. இத்துவக்க நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பயாசி வழங்கும் விருதுகளையும் வழங்க உள்ளார். இந்த புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
மொத்தம் 17 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. மொத்தம் 9000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும் அனைத்து அரங்கிலும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. பபாசியில் உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது.
தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் நேஷனல் புக் டிரஸ்ட் பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தொல்லியல்துறை, ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கின்றது. இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது. உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைகள் இடம் பெற உள்ளது. நிறைவு நாள் நிகழ்வில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர், மகாதேவன் விழா நிறைவுரை நிகழ்த்துகிறார்.
இந்நிலையில் தென்னிந்தியப் புத்தகம் விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர் ஒருவர், ‘புத்தகக்காட்சியில் விற்கப்படும் குடிநீர், தேநீர் போன்றவற்றின் விலை உயர்வு அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார்கள்’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, “வெளியில் மற்ற இடங்களில் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ, அதே விலையில் தான் விற்கப்படுகிறது கூடுதல் விலைக்கு ஏதும் விற்பனை செய்யப்படுவதில்லை. தரமான பொருட்கள் விற்கப்படுவதால் கூடுதல் விலை போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
மேலும், ‘திருநங்கைகளுக்கு அரங்கம் ஒதுக்கப்படும் போது பக்கத்தில் உள்ள பதிப்பக அரங்கத்துடன் பிரச்சனை இருந்து கொண்டுள்ளது. இந்த அச்சத்தைப் போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என மற்றொரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘பதிப்பாளர்கள் என்று வந்து விட்டாலே அனைவரும் சம உரிமையாகத் தான் பார்க்கப்படும் திருநங்கைகள் என்று தனிப்பட்ட முறையில் அரங்குகள் கொடுத்து விட்டால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே குலுக்கல் முறையில் தான் அரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எல்லாரும் எல்லோருக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
புத்தகக்காட்சியின் போது இணைய வழியில் பணம் செலுத்தும் போது பிரச்சனை ஏற்படுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘கடந்த 2, 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறு அளவில் பிரச்சனை இருந்தது. கடந்த ஆண்டு இதனைச் சரிசெய்தோம். மேலும் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில் டவர் அமைக்கப்பட்டது. வைபை கனெக்சன் கொடுத்தோம். வாசகர்கள் ஒரே சமயத்தில் அதிகமாக வரும்போது நெட்வொர்க் பிரச்சனைகள் ஒன்றிரண்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)