Skip to main content

பா.ம.க நிர்வாகி கொலை வழக்கில் பரபரப்பு; தந்தை மரணத்திற்கு மகளின் காதல் காரணம்?

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

Chengalpattu PMK Leader passes away case police fir

 

செங்கல்பட்டைச் சேர்ந்தவர் நாகராஜ். பூ வியாபாரம் செய்து வந்த இவர், செங்கல்பட்டு பா.ம.க. வடக்கு மாவட்ட நகரச் செயலாளராக இருந்தார். கடந்த 9 ஆம் தேதி இரவு நாகராஜ் வியாபாரத்தை முடித்துவிட்டு, கடையிலிருந்து வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் நாகராஜை வழிமறித்துள்ளது. அவர்களைக் கண்டதும் ஏதோ அசம்பாவிதம் நடக்கவிருப்பதை உணர்ந்த நாகராஜ், அவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தார். ஆனால், அந்த ஆறு பேர் கொண்ட கும்பல் நாகராஜை மடக்கி அவர்கள் வைத்திருந்த அரிவாள் உட்படப் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் நிலை தடுமாறி நாகராஜ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே அந்தக் கும்பல், அங்கிருந்து தப்பி ஓடியது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் நாகராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

 

அதனைத் தொடர்ந்து இந்தத் தகவல் செங்கல்பட்டு காவல்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. மேலும், நாகராஜின் கொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவரது உறவினர்களும், பா.ம.க.வினரும் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் நாகராஜின் உறவினர்கள் மற்றும் பா.ம.கவினரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். மேலும், நாகராஜ் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். 

 

இந்நிலையில், கொலைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், செங்கல்பட்டு அடுத்த புலிபாக்கம் பகுதியில் இருப்பதாகப் போலீஸுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர், அந்த நபரைப் பிடிக்க முற்பட்டபோது அந்த நபர் போலீஸார் மீது கற்களை வீசியுள்ளார். மேலும், தன்னை நெருங்கி வந்தால் கத்தியால் குத்திவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். அதனையும் மீறி காவல்துறையினர் துணிச்சலாக அந்த நபரை நெருங்கியுள்ளனர். அப்போது அந்த நபர் ஒரு காவலரைக் குத்த முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு நகர காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தனது கைத்துப்பாக்கியால் அந்த நபரின் இடது காலில் சுட்டார். இதில் நிலை தடுமாறி அந்த வாலிபர் கீழே சரிந்தார். பிறகு அவரை மீட்ட காவல்துறையினர் அவரை முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதல் உதவி சிகிச்சை வழங்கி பிறகு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

 

Chengalpattu PMK Leader passes away case police fir

 

பிடிபட்ட அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, அவரின் பெயர் அஜய் (எ) சிவப்பிரகாசம் என்பதும், அவர் செங்கல்பட்டு கே.கே.தெரு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு அவரிடம் விசாரித்த போலீஸார் கொலைக் கும்பலைச் சேர்ந்த கார்த்திக் என்பவரையும் கைது செய்தனர். 

 

மேற்கொண்டு போலீசார் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையான நாகராஜின் 17 வயது மகள் காதலால் இந்தக் கொலை நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. செங்கல்பட்டு நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா(27). இவர் நாகராஜின் மகளைக் காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் நாகராஜுக்கு தெரிய வந்ததும், அவர் தனது மகளைக் கண்டித்துள்ளார். மேலும், இந்தக் காதலுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாகராஜுக்கு விவகாரம் தெரியவந்து அவர் கண்டித்தும் அவரது மகள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சூர்யாவுடன் சென்றிருக்கிறார். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. மகள் வீட்டைவிட்டுச் சென்றதும் நாகராஜ் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

 

அந்தப் புகாரை ஏற்ற செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஒரு மாதம் கழித்து அவர்கள் நாகப்பட்டினத்தில் இருந்ததைக் கண்டறிந்தனர். பிறகு அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மீட்டனர். 17 வயது சிறுமியை அழைத்துச் சென்றதால் சூர்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். மேலும், சிறுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

 

இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த சூர்யா தனது காதலியை பார்ப்பதற்காக பலமுறை நாகராஜ் வீட்டு அருகே சுற்றித் திரிந்துள்ளார். ஆனால், சூர்யாவை நாகராஜ் தடுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சூர்யா, நாகராஜை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, சூர்யா தனது நண்பர்களான அஜய், கார்த்திக் மேலும் மூவருடன் இணைந்து கடந்த 9 ஆம் தேதி இரவு வியாபாரம் முடித்துவிட்டு வந்த நாகராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர் என்பது போலீஸின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், கொலைக் குற்றத்தில் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளி சூர்யா மற்றும் தலைமறைவாக உள்ள மூவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்