
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த இரண்டு கொலைகள் பரபரப்பை ஏற்படுத்த, கொலையை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இரண்டு ரவுடிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். இந்த கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள காவல் நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த அப்பு கார்த்திக் என்பவரை, மூன்றுபேர் கொண்ட மர்ம கும்பல் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேட்டுத்தெருவில் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த மகேஷ் என்பவரை வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பித்துச் சென்றனர். போலீசார் விசாரணையில் இரண்டு கொலையையும் செய்தது ஒரே கும்பல் என்பது பின்னரே தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று மாதவன் என்பவனையும் கொலைக்கு நாட்டு வெடிகுண்டு தயாரித்துக்கொடுத்த ஜெசிகா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவர் செங்கல்பட்டை அடுத்துள்ள இருக்குன்றம் பாலாறு பகுதியில் உள்ள காட்டில் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைக்க அங்கு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். பதுங்கி இருந்த ரவுடிகள் தினேஷ் மற்றும் மொய்தீனை போலீசார் பிடிக்க முற்படுகையில் அவர்கள் போலீசாரை திரும்பதாக்கினர். இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கிசூடில் இருவரும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர்.

என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடிகள் தினேஷ் மற்றும் மொய்தீன் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளதாக செங்கல்பட்டு எஸ்.பி அரவிந்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்திற்கு காதலே காரணம் எனத்தெரியவந்துள்ளது. என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி தினேஷின் சகோதரியை ஹரிகிருஷ்ணன் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் தினேஷ் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஹரிகிருஷ்ணன் நண்பர்கள் மகேஷ், அப்பு கார்த்திக் ஆகியோர் தினேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் அவனது நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு இந்த கொலை சம்பவத்தை நிகழ்ந்தியுள்ளதுபோலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Follow Us