/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adv-1.jpg)
பூந்தமல்லி பகுதியை சேர்ந்த நந்தினி, தனது கணவர் ரவி எட்வின் விபத்தில் இறந்ததில் இருந்து தன்னுடைய மாமியார் சந்தானலட்சுமி தன்னை கொடுமைப்படுத்துவதாக புகாராளித்து வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், சொத்தை அபகரிக்கும் முயற்சியில் தன் மாமியார் சந்தானலட்சுமி மீது பொய்யான புகார் கொடுத்துள்ளதையும், போலியான கையெழுத்தின் மூலம் இழப்பீட்டுத் தொகையையும், சொத்தையும் அபகரிக்க முயன்றுள்ளார் என்பதும் நிரூபணமானதால், அவ்வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக சந்தானலட்சுமியின் வழக்கறிஞர் பிரதீப் அசோக்குமார் கூறுகையில், "பூந்தமல்லியைச்சார்ந்த மறைந்த எட்வின்ஸ்பின் என்பவரின் மனைவி சந்தானலட்சுமி. இவர்களுக்கு ராஜா எட்வின், ரவி எட்வின் என்ற இரு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் சந்தான லட்சுமி சவுதி அரேபியாவில் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வரும் தன் மூத்த மகனான ராஜா எட்வினுடன் தங்கியிருந்தார். சென்னைக்கு அடிக்கடி வந்து செல்வார். ராஜா எட்வின் சம்பாதித்த பணத்தில் அவர் விருப்பத்தின்படி, பூந்தமல்லி பாலாஜி நகர் மற்றும் வாசுதேவன் நகரில் சொகுசு வீடுகளை தன் பெயரில் வாங்கியிருந்தார் சந்தானலட்சுமி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adv-2.jpg)
இந்த நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை கிண்டியில் நடந்த சாலை விபத்தில் ரவி எட்வின் உயிழந்தார். மகன் இறந்த செய்தியறிந்து சவுதியிலிருந்து இந்தியாவுக்கு வந்தார் சந்தான லட்சுமி. இளைய மகனுக்கான ஈமச்சடங்குகள் முடிந்த சில தினங்களிலேலே, ரவி எட்வினின் மனைவி நந்தினியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் இருவருக்குமிடையே சிறு சிறு சண்டைகள் உருவான நிலையில், கே.கே.நகரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மூலம் அடியாட்களை வைத்து சந்தானலட்சுமியை வீட்டை விட்டே விரட்டியடித்தார், பின்னர் 2010ஆம் வருடம் சவுதியிலிருக்கும் தன் மூத்த மகனிடமே சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நந்தினி, கடந்த 2017ஆம் ஆண்டு மாமியார் சந்தானலட்சுமி மீது குடும்ப நல வழக்கு தொடர்ந்தார், இந்த வழக்கு விசாரணையில், எங்கள் தரப்பில் சில ஆவணங்களை சரிபார்த்த நிலையில், நந்தினிக்கு ஏற்கெனவே உமாமகேஸ்வரன் ராவ் என்பருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது தெரியவந்தது. அவரோடு விவாகரத்தானபின் ரவி எட்வினுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், ரவி எட்வின் விபத்தில் இறந்தார். அதன்பின்னர், முதல் கணவரின் பெண் குழந்தையை இரண்டாவது கணவரான ரவி எட்வினின் வாரிசு என்று போலியாக வாரிசுச் சான்று பெற்றது தெரியவந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/judgement--art-file_43.jpg)
மேலும், கடந்த 2010, பிப்ரவரியில், சந்தான லட்சுமி சவுதிக்கு சென்ற பின்னர், விபத்தில் பலியான ரவியின் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக சந்தானலட்சுமியின் கையெழுத்தை போலியாகப் போட்டிருந்த மோசடியும் தெரியவந்தது. இந்த காப்பீட்டுத் தொகை வங்கிக்கு வந்த நிலையில், வங்கி மேலாளரிடம் காப்பீட்டுத் தொகை 23 லட்சத்தை வழங்குமாறு நந்தினி வற்புறுத்தியுள்ளார். அதற்கு வங்கி மேலாளர் மறுப்பு தெரிவித்த நிலையில், சந்தானலட்சுமி சார்பில் சிறு வழக்கு நீதிமன்ற பதிவாளரிடம் புகார் மனு அளித்தோம். எங்களுக்கு தெரியாமல் இழப்பீடு தரக்கூடாது என்று புகாரளித்தோம்.
சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காத நிலையில், உயர் நீதிமன்றம் மூலம் முதல் தகவல் அறிக்கை பெற்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சார்பில் விசாரணை நடத்தினர். இதில் 18 பேர் அளித்த சாட்சியங்களின் பெயராலும், 35 அரசு தரப்பு ஆவணங்களை சமர்ப்பித்த நிலையிலும், நந்தினி மோசடி செய்தது தெளிவாக நிரூபிக்கப்பட்டது.
அதையடுத்து, நந்தினி குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு மூன்று வருடம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையிலேயே கடந்த 2018ஆம் ஆண்டு சந்தான லட்சுமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது ஒரு வருத்தமான நிகழ்வு. ஆனாலும் இன்றுவரை சந்தான லட்சுமிக்கு சொந்தமான பூந்தமல்லியிலுள்ள பாலாஜி நகர் மற்றும் வாசுதேவன் நகரிலுள்ள சொத்துக்கள் நந்தினியின் அனுபவத்தில்தான் உள்ளது என்பது வருத்தமாக ஒன்று. மனுதாரர் இறந்த நிலையிலும் அவருக்கு நீதி கிடைத்துள்ளது என்ற வகையில் இத்தீர்ப்பு குறித்து பெருமிதம் கொள்கிறோம்" என்றார். கால தாமதம் ஆனபோதிலும், இவ்வழக்கில் நீதி வென்றிருப்பது, நீதித்துறையின் மீது நம்பிக்கை அளிக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)