/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4208.jpg)
காதல் மனைவியை கர்ப்பமாக்கி கைவிட்டுவிட்டு வந்த கணவர் வீட்டு முன்பு கர்ப்பிணிப் பெண், தரையில் அமர்ந்து 5 நாள்களாகப்போராட்டம் நடத்தி வருகிறார். அவருடைய புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் மோகன்ராஜ் (27). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார். மோகன்ராஜும், உள்ளூரைச் சேர்ந்த, பி.எஸ்சி., பட்டதாரியான பவித்ரா என்ற இளம்பெண்ணும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். கடந்த மே மாதம் 22ம் தேதி, அவர்கள் இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி காஞ்சிபுரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மோகன்ராஜ், தனது தங்கைக்கு பிறந்த குழந்தையைப் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார். அதன்பிறகு அவர் காதல் மனைவியைச் சந்திக்கவில்லை. பவித்ரா, தனது கணவரை அலைப்பேசி வாயிலாகப் பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவர் பேச மறுத்துவிட்டார். தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ள பவித்ரா, வேலக்கவுண்டனூரில் உள்ள மோகன்ராஜை தேடி அவருடைய வீட்டிற்குச் சென்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1592.jpg)
அப்போது மோகன்ராஜின் தந்தை முருகன், தாயார் சாரதா மற்றும் உறவினர்கள் பவித்ராவை வீட்டுக்குள் வரக்கூடாது என்று வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் ஏமாற்றம் அடைந்த அவர், தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி ஓமலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் அளித்து ஒரு மாதம் ஆகியும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த பவித்ரா, ஆகஸ்ட் 23ம் தேதி தனது பெற்றோர், உறவினர்களுடன் கணவரின் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 5 நாள்களாகப் போராட்டம் நீடிக்கிறது.
இந்நிலையில் தனது கணவரை அவருடைய பெற்றோர் மறைத்து வைத்துக் கொண்டு, தன்னுடன் சேர்ந்து வாழ விடாமல் தடுப்பதாகவும், இதுகுறித்து கேட்டபோது 100 பவுன் நகைகளும், 20 லட்சம் ரூபாயும் கொண்டு வந்தால்தான் கணவருடன் சேர்ந்த வாழ அனுமதிப்போம் என்றும் வரதட்சணைக் கேட்டதோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக ஓமலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், மோகன்ராஜ், அவருடைய தந்தை முருகன், தாயார் சாரதா என்கிற சத்தியா, உறவினர்கள் பூபதி, சவுமியா, செல்வி, பிரபு ஆகிய 7 பேர் மீது வரதட்சணைக் கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, கணவரின் பெற்றோரும், உறவினர்களும் தங்களின் வீடுகளைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தனது புகார் மீது காவல்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாகக் கூறியும், உடனடியாக அவர்களைக் கைது செய்யக் கோரியும் பவித்ரா தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கர்ப்பிணிப் பெண் தொடர்ந்து போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாக கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)