Chased police! The young man who jumped into the well!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தென் பாசார் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வட மாநில இளைஞர் ஒருவர் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றுகொண்டு ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். வாகனங்களில் சென்றவர்கள் நடந்து சென்றவர்கள் என அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நீண்ட நேரம் சாலையில் ரகளையில் ஈடுபட்டு வந்த அந்த இளைஞரை அந்த வழியாக ரோந்து பணிக்கு சென்ற போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்வதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்தனர்.

Advertisment

அப்போது, போலீசாரை கண்டதும் அந்த இளைஞர் பயந்து மிரண்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். போலீஸாரும் அவரை துரத்தினர். இந்நிலையில், பதட்டத்தில் அந்த இளைஞர் அந்தப் பகுதியில் உள்ள மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் திடீரென குதித்துள்ளார். கிணற்றில் இருந்து மேலே ஏறி வருமாறு போலீசார் வலியுறுத்தினர். கிணற்றில் இருந்து மேலே ஏறி வந்தால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்து கிணற்றிலிருந்து வெளியே வர முடியாது என்று மறுத்துள்ளார் அந்த இளைஞர்.

Advertisment

அதையடுத்து போலீசார் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி அந்த இளைஞரை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். பிறகு அவருக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, அறிவுரைக் கூறி அனுப்பிவைத்தனர்.