Skip to main content

“அறநிலையத்துறை வணிக வளாகங்களில் வாடகையை உடனடியாக குறைக்க வேண்டும்”-  விக்கிரமராஜா  

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

"Charities should immediately reduce rent in commercial premises" - Vickramarajah

 

கடலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கடலூர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இணைந்து நடத்திய பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த அவர், "தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகிற மே. 5ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள வணிகர் தின மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் இதில் கலந்துகொள்ள உள்ளனர். கரோனா பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நலிவடைந்த நிலையில் உள்ள வணிகர்களுக்கு  இந்த மாநாடு தீர்வு காணும் வகையில் அமையும். மேலும் அந்த மாநாட்டு மேடையில் முதலமைச்சர் வணிகர்களின் பல்வேறு பாதிப்புகளுக்குத் தீர்வுகள் அறிவிப்பார் என லட்சக்கணக்கான வணிகர்கள் நெஞ்சில் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் திரளாகக் கலந்து கொள்வார்கள். 

 

ஆங்கிலேயர்கள் ஆண்ட பிறகு தற்போது வரை கடலூர் மாவட்டம், எந்த வித மாற்றமும் இல்லாமல் உள்ளது. தற்போது கடலூர் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை வருவதற்கு அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் துறைமுகத்தில் வேகமாக அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் தொழில் வளம் மற்றும் தொழில் வளர்ச்சி அடைவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார். மேலும் மிக முக்கியமாகக் கருதப்படும் மார்க்கெட்களில் உள்ள கடைகள் மிகக் குறைந்த அளவில் கட்டிடம் உள்ள நிலையில் அதிக வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகையால் கட்டிடத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்த வேண்டும். மேலும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கடைகளுக்கு வாடகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வணிகர் சங்க நிர்வாகிகளை இணைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்குச் சீரான வாடகையை நிர்ணயம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

 

வணிகர்களுக்கு வங்கி மூலம் குறைந்த வட்டியில் நிதியுதவி வழங்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் தீவிர நடவடிக்கை எடுத்த காரணத்தினால் தற்போது தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் ஜி.எஸ்.டி இல்லாத வணிகர்களையும் இணைத்து வருகிறோம். மேலும் இதில் சேர்மன் கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உற்பத்தியாளர்கள் விளைவிக்கும் பொருட்கள் சாமானியர்களுக்கு ஒரு விலையும், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்களுக்கு ஒரு விலையும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு விலையும் நிர்ணயம் செய்வதை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும். இதன் மூலம் பல லட்சம் வியாபாரிகள் நலிவடையும் நிலை ஏற்படும். 

 

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முதலமைச்சர் சீரிய முயற்சியால் தற்போது மஞ்சப்பை எடுத்துச் செல்ல நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் நூல் மற்றும் பொருட்களுக்கு வரிகளில் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விக்ரவாண்டி- தஞ்சாவூர் சாலையை உடனடியாக சீரமைத்து அனைவரும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்