
மகளிர் இலவச பேருந்தில் பெண்களிடம் நடத்துநர் டிக்கெட் கொடுத்துக் கட்டணம் வசூலித்ததாக பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் இயக்கப்பட்ட அரசு பேருந்தில் பெண்களிடம் கட்டண வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. '695G' என்ற எண்ணில் இயங்கும் அந்த அரசு பேருந்தில் பெண்கள் சிலர் ஏறியுள்ளனர். நத்தம், சமுத்திரப்பட்டி, கொட்டாம்பட்டி பகுதியில் ஏறிய பெண்களிடம் நடத்துநர் பயணிச்சிட்டை கொடுத்து 17 ரூபாய் கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம் பண்டாங்குடி பகுதியில் ஏறிய பெண்களிடம் நடத்துநர் டிக்கெட் வசூல் செய்யவில்லை என பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தங்களது எதிர்ப்பை தெரிவித்து பெண்கள் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உடனடியாக நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. அந்த வீடியோவில், 'பேருந்தை மறியுங்கள். இவர் என்ன வீட்டில் இருந்தா கொண்டு வருகிறார். பெண்களுக்கு இலவச பயணம் இருக்கும்போது எதற்கு டிக்கெட் கொடுக்கிறார். நத்தத்தில் இருந்து சிங்கம்புணரிக்கு வறோம். இங்க பாருங்க 17 ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்திருக்கிறார். எங்களுக்கு மட்டும் டிக்கெட் வாங்கிட்டு மத்த பெண்களுக்கு டிக்கெட் வாங்காமல் விட்டால் என்ன அர்த்தம்' என கொதித்தெழுந்தனர்.