திருநெல்வேலி மாவட்டம் பலவூர் கோவிலில் கடந்த 2005ஆம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடு போனது. இந்த திருட்டு வழக்கில் அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், அப்போது டி.எஸ்.பி.யாக இருந்த காதர் பாட்ஷாவை வேண்டுமென்றே இந்த வழக்கில் சேர்த்ததாகவும், சிலை கடத்தலில் தொடர்புடைய தீன தயாளனைத் தப்பிக்க வைப்பதற்காகத் தன்னை சேர்த்ததாகக் கூறி  பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  காதர் பாக்ஷா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. இந்த சூழலில் சிபிஐ சார்பில் பொன் மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சி.பி.ஐ. சார்பில் மதுரை விசாரணை நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது . இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா அமர்வில் இன்று (09.07.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், “பொன் மாணிக்கவேல் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

அதே சமயம் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த விவரங்கள் எதுவுமே எங்களுக்குத் தெரியாது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தொடர்பான எந்த நகலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை நகலை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.