/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4445.jpg)
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்கள், உறவினர்கள் கூட்டுச் சேர்ந்து வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் மீது திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர். காமராஜ். தற்போதுஅதிமுக திருவாரூர் மாவட்டச் செயலாளராகவும், நன்னிலம் சட்டமன்றத்தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார். காமராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை அமைச்சராக இருந்தபோது, அரசு பதவியைத்தவறாகப் பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாகத்தனது பெயரிலும், மகன்கள், மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரது பெயரிலும் 58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
அதை உறுதிசெய்து அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் அவரது மகன்கள் எம்.கே.இனியன்,எம்.கே. இன்பன், உறவினர் ஆர். சந்திரசேகர், நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, எஸ். உதயகுமார் ஆகியோர் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து மன்னார்குடியில் உள்ள ஆர். காமராஜ் வீடு, தஞ்சாவூர் பூக்கடை மேலவாஸ்து தெருவில் உள்ள அவரது சம்பந்தி டாக்டர் மோகன், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை எனத்தமிழகம் முழுவதும் 51 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அந்த சோதனையில் 41 லட்சத்து 6 ஆயிரம் ரொக்கம், 963 பவுன் நகைகள், 24 கிலோ வெள்ளி, செல்போன்கள், லேப்டாப், பென்டிரைவ் ஹார்டு டிஸ்க் மற்றும் ஆவணங்கள் எனக் கைப்பற்றப்பட்டன. அதோடு கணக்கில் வராத ரூ. 15.50 லட்சம் பணம், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றையும் கைப்பற்றி விசாரணைநடந்து வந்தது. “ஊழல் தடுப்பு போலீசார் எங்களது வீட்டில் நடத்திய சோதனையில் எந்தவித ஆவணங்களையும் கைப்பற்றவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த ரைடு நடந்தது” என அப்போது ஆர். காமராஜ் பேட்டியளித்தார்.
இந்த நிலையில், இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 127 கோடியே 49 லட்சம் அளவிற்கு சொத்து சேர்த்திருப்பதாகக் கூறி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார், திருவாரூர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றனர். அதோடு சொத்து சேர்த்த வழக்கில் 810 பக்கத்திலான குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.குற்றப்பத்திரிகையுடன் 18,000 ஆவணங்களும் பெட்டி பெட்டியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக போலீசார் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் வட்டாரத்தில் விசாரித்தோம், “ஆர். காமராஜ் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது நண்பர்கள் சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் உள்ளிட்டவர்களோடு கூட்டு சேர்ந்து நார்க் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் என்கிற பினாமி பெயரில் இடத்தை வாங்கி அதில் அவரது மகன்களான இனியன், இன்பன் பெயரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் என்கிற பல்நோக்கு மருத்துவமனை கட்டியுள்ளார். 127 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 85 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்திருப்பதுஆதாரத்தோடு தெரிய வந்துள்ளதை தொடர்ந்து, ஆர். காமராஜ் அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட ஆறு பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறோம். விரைவில் அவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)