Change of investigating officer investigating VenkgaiVayal case

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் இன்று வரை 394 வது நாளாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். 2 பேரிடமும் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அடுத்தகட்டமாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மூலம் இந்த விவகாரத்தில் 221 நபர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் வேங்கைவயல் வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். அதன்படி பால்பாண்டி மாற்றப்பட்டு டி.எஸ்.பி. கல்பனா புதியவிசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.