
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் தேர்வில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் துவங்கியது. கட்சியின் அவைத் தலைவராக இருந்துவந்த மதுசூதனன் மறைந்ததை அடுத்து புதிய அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கட்சி விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இதுவரை கட்சி பொதுக்குழு உறுப்பினர்களால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் அந்த விதியில் தற்போது புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, இனி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அடிப்படை உறுப்பினர்களால்தான் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற புதிய விதியை மாற்றவோ, திருத்தவோ முடியாது என்று அதிமுக அமைப்பு விதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இனி இந்த இரண்டு பொறுப்புக்களுக்கு போட்டியிடுபவர்களை கட்சி அடிப்படை உறுப்பினர் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.