Skip to main content

“இந்திய விண்வெளித் துறையில் பல்வேறு திட்டங்கள் செய்யப்படவுள்ளது” - சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Chandrayaan 3 Project Director veeramuthuvel says about scientific research

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட்  23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வந்தது.

 

ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும் பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலத் திட்டத்தின் திட்ட இயக்குநரான வீரமுத்துவேலுவை பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டியும், கெளவரவித்தும் வருகின்றனர். அந்த வகையில், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பயின்ற சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஞ்ஞானி வீரமுத்துவேல் கூறியதாவது, “சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி தனிப்பட்ட ஒரு நபரின் வெற்றி மட்டுமல்ல. ஒரு குழுவாக இணைந்து பல்வேறு தோல்விகளை எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் மேற்கொண்டோம். அந்த முயற்சியின் தொடர் நடவடிக்கையால் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது. எனவே, மாணவர்கள் விடாமுயற்சியுடன் உழைக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.

 

அரசு வேலைகளிலும் அறிவியல் ஆய்வுகளிலும் தென்னிந்தியர்களை விட வட இந்தியர்கள் தான் அதிக அளவில் இருக்கின்றனர். வட இந்தியர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டு முயற்சி செய்து வெற்றி பெறுகிறார்கள். ஆனால், தென்னிந்திய மக்களை பொறுத்தவரை ஒரு முறை அல்லது இரண்டு முறை தோல்வி அடைந்தால் தொடர்ந்து முயற்சி செய்யாமல் வேறு துறைக்கு செல்கின்றனர். தோல்வி அடைந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெறலாம். அதை தென்னிந்தியர்களும் செய்ய வேண்டும். இந்தியாவில் விண்வெளித் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் எதிர்காலத்தில் செய்யப்படவுள்ளது. நிலாவுக்கு மனிதர்களை அனுப்புவது உட்பட ஏராளமான திட்டங்களை வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்