Advertisment

தமிழக மாங்காய் விவசாயிகளை காப்பாற்றிய சந்திரபாபுநாயுடு

chandrababu naidu

Advertisment

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், பரதராமி பகுதிகளில் மாங்காய் விளைச்சல் அதிகம். ஆண்டுக்கு 2 லட்சம் டன் மாங்காய் உற்பத்தியாகும் பகுதி இது. இந்த மாங்காய்களில் 70 சதவிகிதம் வேலூர் மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு அனுப்பிவைக்கப்படும்.

சித்தூரில் மட்டும் மாங்கூழ் தயாரிக்கும் சிறியதும், பெரியதுமாக 500 கம்பெனிகள் உள்ளனவாம். இந்த கம்பெனிகளுக்கான மாங்காய்கள் சித்தூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்தும், வேலூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்தும் தொழிற்சாலைகள் வாங்கும். இதன் மூலம் வேலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற்றும், ஓரளவு லாபம் பெற்றும் வந்தனர்.

இந்த ஆண்டும் வேலூர் மாவட்ட விவசாயிகள் மாங்காய்களை ஏற்றுமதி செய்தனர். தமிழக மாங்காய் ஆந்திராவுக்குள் வருவதால் தங்களது மாங்காய் விலை குறைவதாக சித்தூர் மாவட்ட விவசாயிகள் குற்றம்சாட்டினர். குற்றம் சாட்டியதோடு இதுதொடர்பாக ஆந்திரா முதல்வரும், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு புகார் அனுப்பினர்.

Advertisment

இதுக்குறித்து ஆந்திரா அரசு அதிகாரிகள் விசாரித்தபோது, தமிழக மாங்காய் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக ஆந்திராவிற்கு சென்றதால் ஆந்திரா மாங்காயை கிலோ 5 ரூபாய் அளவுக்கே வாங்கியுள்ளனர் கம்பெனி ஊழியர்கள். தமிழக விவசாயிகளிடமும் அதே அளவுக்கு தான் வாங்கியுள்ளார்கள். தமிழக மாங்காய் ஆந்திராவுக்குள் வரவில்லையென்றால் கூடுதல் விலை நம் விவசாயிகளுக்கு கிடைக்கும் என அறிக்கை தந்துள்ளனர். இதனால் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில் சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்தியூம்னா, தமிழக மாங்காய்கள் ஆந்திராவுக்கு வருவதற்கு கடந்த 4ந்தேதி தடைவிதித்தார். இதனால் வேலூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுப்பற்றி வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் புகார் மனு அளித்தனர். அவரும் சித்தூர் ஆட்சியரிடம் பேசியுள்ளார். இது அரசின் முடிவு என்றுள்ளார். இந்நிலையில் ஜீலை 8ந்தேதி சாலையில் மாம்பழங்களை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது பெரும் பிரச்சனையாவதை உணர்ந்தது ஆந்திரா அரசு.

இந்நிலையில் சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம் ஜீலை 9ந்தேதி வேலூர் மாவட்ட விவசாயிகள் சார்பாக விவசாயிகளை வஞ்சிக்காதீர்கள் என மனு அளிக்கப்பட்டது. அவர் நாளை ஜீலை 10ந்தேதி முதல் மாங்காய்களை ஆந்திராவுக்கு அனுப்ப அனுமதியளித்துள்ளார்.

இந்த ஆண்டு தமிழக மாங்காய் ஆந்திராவுக்குள் வந்ததால் ஆந்திரா மாநில விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டன்னுக்கு 2500 ரூபாய் ஆந்திரா மாங்காய் விவசாயிகளுக்கு நஷ்டயீடாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆந்திரா தனது மாநில விவசாயிகளை நட்டத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது. தமிழக விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என அவர்களும் தொடர்ந்து ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் ஆந்திரா விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு 75 ஆயிரம் கிடைக்கிறது. தமிழக விவசாயிகளுக்கு 40 முதல் 50 ஆயிரம் கிடைக்கும் நிலையே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Chandra babu naidu mango vellure
இதையும் படியுங்கள்
Subscribe