ADVERTISEMENT

சந்தன வீரப்பன் சமாதி அருகே மாதையன் உடல் அடக்கம்! 

07:48 AM May 27, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உடல் நலக்குறைவால் உயிரிழந்த, ஆயுள் தண்டனை கைதியான சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் உடல், மூலக்காட்டில் வீரப்பன் சமாதி அருகே புதன்கிழமை (மே 25) இரவு அடக்கம் செய்யப்பட்டது.

சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் (வயது 78). ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் காவல்நிலைய எல்லையில் வனச்சரகர் சிதம்பரநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் இருதய பாதிப்பு, ஆஸ்துமா, நீரிழிவு உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் அடிக்கடி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மே 1- ஆம் தேதி அவருடைய உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டது. அவர் உடனடியாக அதே நாளில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூ பிரிவில் சிகிச்சையில் இருந்த அவர், மே 25- ஆம் தேதி அதிகாலை 05.45 மணியளவில் உயிரிழந்தார்.

சிறைக்கைதி மரணம் என்பதால், இதுகுறித்து சேலம் மாவட்ட மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் தங்க கார்த்திகா நேரில் விசாரணை நடத்தினார். அவர் முன்னிலையில் மாதையனின் சடலம் கூராய்வு செய்யப்பட்டு, வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

உடற்கூராய்வு செய்யப்பட்ட முடிந்த பிறகு, மே 25- ஆம் தேதி மாலை 06.30 மணியளவில் மாதையனின் சடலம், உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறை அருகே, தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், உறவினர்கள் மாதையன் சடலத்துக்கு வீர வணக்கம் செலுத்தினர்.

இதையடுத்து அரசு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சடலம், வீரப்பனின் சொந்த ஊரான மேட்டூர் அருகே உள்ள மூலக்காடுக்குக் கொண்டு செல்லப்பட்டது.மூலக்காட்டில் வீரப்பன் சமாதி அருகே, மாதையன் சடலமும் சம்பவத்தன்று இரவு 11.00 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அவருடைய மகள்கள் வித்யா, விஜயலட்சுமி, மாதையனின் மனைவி மாரியம்மாள், மகள் ஜெயம்மாள், மருமகன் முனுசாமி, பேரன் ஸ்ரீநாத், பழங்குடி மக்கள் சங்க பொறுப்பாளர் அன்புராஜ் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT