Chance of very heavy rain Meteorological Center forecast

Advertisment

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இன்று (26.06.2024) ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்படுகிறது. 12 முதல் 20 செ.மீ. வரை மழை பொழிவிற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை (27.06.2024) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதே போன்று கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (26.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.