தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று (21.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை (22.05.2024) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் இது வடக்கிழக்கு திசையில் நகர்ந்து மே 24 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக்கூடும். எனவே கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (21.05.2024) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் நீலகிரி, ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மே 23 ஆம் தேதி விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மே 24 ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.