Chance of rain in Chennai Meteorological Department informs

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதே சமயம் சென்னை மெரினா, பெரம்பூர், சிட்லபாக்கம், மடிப்பாக்கம், விருகம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தரமணி, அம்பத்தூர், மேடவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (11.12.2024) காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

அதே போன்று தாம்பரம், ஆதம்பாக்கம், சிட்லபாக்கம், முகப்பேர், பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், பாடி, குமணன்சாவடி, மதுரவாயல், கொரட்டூர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் இன்று (11.12.2024) மதியம் 1 மணிக்குள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Advertisment

மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (11.12.2024) மதியம் 1 மணிக்குள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.