Chance of rain again  attention of the people of Kumari district

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் கன்னியாகுமரியில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2023 காரணமாகத்தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, இதர அணைகளில் நீர்வரத்து அதிகமாகி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

Advertisment

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளது. அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், தாமிரபரணி மற்றும் இதர ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்பாகவும், அதே வேளையில் ஆறு மற்றும் குளங்களில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டத்தில் அதிகப்படியான குளங்கள் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆறு மற்றும் குளத்தின் கரைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும், இவ்விடங்களுக்குச் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது. மேலும் தென் மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment