Chance of rain in 18 districts including Chennai

Advertisment

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. இத்தகைய சூழலில் தான் கோவை, நீலகிரி ஆகிய இரு மாவட்டங்களிலும் அதி கனமழை பொழிந்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (29.05.2025) காலை 06.50 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இன்று காலை 10:00 மணி வரை இடியுடன் மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.எனவே இன்றும், நாளையும் (30/05/2025) என 2 நாட்களுக்கு மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், அவசரநிலை ஏற்பட்டால் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதோடு நீலகிரி மாவட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தென்மேற்கு பருவமழை தொடர்பாக பல்வேறு எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி நடுவட்டம் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய பாறைகள் மற்றும் குப்பைகள் மலைப்பாதையில் உருண்டு விழும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.எனவே இந்த கடுமையான ஆபத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மறு அறிவிப்பு வரும் வரை பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் கனரக வாகனங்கள் நடுவட்டம் சாலையைப் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் பகல் நேரங்களில் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகின்றன.சுற்றுலா வாகனங்கள் சோதனைச் சாவடியில் நிறுத்தப்படுகின்றன. அதற்கு மேல் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டுமே பாதிக்கப்பட்ட பகுதி வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்படும். அப்பகுதி குடியிருப்பாளர்கள், பயணிகள் மற்றும் சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பையும், மேலும் இந்த கட்டுப்பாடுகளை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisment

அதே சமயம் நீலகிரியில், மழை மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிப்புகள் ஏற்படும் சூழ்நிலைகளில், பொதுமக்கள் அவசர உதவிக்காக மாவட்ட அவசரக்கால கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1077 மற்றும் 0423-2450034, 0423-2450035 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் மூலம் அவசரக் கால உதவிக்கு 9488700588 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.