
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. இத்தகைய சூழலில் தான் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (24.05.2025) காலை 07.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் காலை 10:00 மணி வரை இடியுடன் மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே போன்று ஈரோடு, நீலகிரி, கரூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில். லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இரவு (23.05.2025) சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்தது. குறிப்பாக ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், முகப்பேர் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
அதே சமயம் கிண்டியில் இருந்து கத்தி பார நோக்கி செல்லும் ஜி.எஸ்.டி.சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அதேபோல் கனமழை காரணமாக 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்திலேயே வட்டமடித்தன. மேலும் நாளை (25.05.2025) மற்றும் நாளை மறுநாள் (26.05.2025) கோவை மற்றும் நீலகிரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு தலா ஒரு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலோ அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு மையங்களுக்கோ பேரிடர் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.