Chance of rain in 13 districts

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேலம், கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (03.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு எதிரொலியாக இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கனமழை காரணமாக விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து சீரானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசூர் - இருவேல்பட்டு இடையே மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்த நிலையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. முன்னதாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உடைப்பட்டதால மடப்பட்டு அருகே போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்தது. திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் பண்ருட்டி வழியாகத் திருப்பி விடப்பட்டன.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று (03.12.2024) காலை மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.