Skip to main content

அமைச்சருக்கு சவால் அதிரடி எம்.பி.

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

அமைச்சர் தங்கமணி காவிரி ஆற்றில் மணல் கொள்ளை நடக்கவே இல்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில் நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியின் எம்.பி.யான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எஸ் சின்ராஜ் சென்ற வாரத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது என்று கூறினார்.

இதை மறுத்த அமைச்சர் தங்கமணி, மணல் கொள்ளை எங்கே நடக்கிறது என்று சவால் விட்டார். இதன் தொடர்ச்சியாக இன்று நாமக்கல்லில் எம்.பி.சின்ராஜ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் ரோந்து சென்றார். அப்போது லாரிகளில் மணல் அள்ளுவதை பார்த்து பரிசோதனை செய்தார். அதில் நான்கு லாரிகளில் அனுமதி இல்லாமல் மணல் கொள்ளை நடப்பதை உறுதி செய்து அந்த லாரிகளை தடுத்து நிறுத்தினார். 

 

போலீஸ் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து வாக்குவாதம் செய்த நிலையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் இதில் உள்ளவர்களை வழக்கு போட வேண்டும் என்றும் கூறினார். வேறு வழி இல்லாமல் போலீஸார் அந்த லாரிகளை சீஸ் செய்து வழக்குப் போட்டு உள்ளார்கள்.
 

இதுபற்றி கூறிய நாமக்கல் எம்பி சின்ராஜ், அமைச்சர் தங்கமணி மணல் கொள்ளை நடக்கவில்லை என்றார். ஆனால் நேரில் சென்று நான் ஆய்வு செய்ததில் மணல் கொள்ளை நடந்துள்ளது. இப்போது அமைச்சர் என்ன சொல்லப் போகிறார் அவர் பதவி விலக வேண்டும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
15 MPs suspension issue; Chief Minister M. K. Stalin's strong condemnation

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரின் அலுவல்கள் நேற்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற மக்களவைக்கு பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசினர். மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பெண்களும் வண்ண புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான நேற்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சூழலில், இன்று (14-12-23) மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியது. அப்போது, மற்ற அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனவும், இந்த சம்பவம் குறித்து அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களுடைய கோரிக்கை இரு அவைகளிலும் ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூச்சல் நிலவியதால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

15 MPs suspension issue; Chief Minister M. K. Stalin's strong condemnation

அதன் பின்னர், 2 மணிக்குப் பிறகு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது மக்களவையில் தமிழக எம்.பி.க்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாகக் கூறி மக்களவை உறுப்பினர்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன், எஸ்.ஆர். பார்த்திபன், ஜோதிமணி, ஹைபி ஈடன், டீன் குரியாகோஷ், டி.என். பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 1 எம்.பி என 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளே இருந்து போராட்டம் நடத்தினர்.

15 MPs suspension issue; Chief Minister M. K. Stalin's strong condemnation

இந்நிலையில் 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “திமுக எம்.பி. கனிமொழி உட்பட 15 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. பாஜக தலைமையிலான மத்திய அரசின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறையா? ஜனநாயகக் கோவிலில் பாதுகாப்பு மீறலுக்கு பதில் தேடும் மக்கள் பிரதிநிதிகள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்? 15 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பாராளுமன்றம் விவாத மேடையாக இருக்க வேண்டுமே தவிர எதிர்க்கட்சிகளின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக இருக்கக் கூடாது” எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

Next Story

மத்திய அமைச்சரைச் சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள் குழு

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

A group of Tamil Nadu MPs to meet the Union Minister

 

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பின் போது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் இம்மனுவில் வலியுறுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் 24 வது கூட்டம் நேற்று நடைபெற்றது. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவர் எஸ்.கே.கல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டார். முன்னதாக வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஜெகாவத்தை காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவர் எஸ்.கே.கல்தர் சந்தித்து காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் நடைபெற்ற விவகாரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

 

இதற்கிடையில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஜெகாவத்தை தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று சந்திக்க இருந்தனர். இருப்பினும் இந்த சந்திப்பு நேற்று நடைபெறவில்லை. இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு மத்திய அமைச்சரை இன்று சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர். இந்த கோரிக்கை மனுவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் முழுமையாக கிடைக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், தமிழகத்திற்கு உரிய நீரை  திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்க உள்ளனர். தமிழக எம்.பி.க்கள் குழுவில் திமுகவின் சார்பாக டி.ஆர்.பாலு, காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி, அதிமுக சார்பாக தம்பிதுரை, சந்திரசேகரன், மதிமுக சார்பாக வைகோ, விசிக சார்பாக திருமாவளவன், பாமக சார்பாக அன்புமணி, தமாகா சார்பாக ஜி.கே.வாசன், சுப்பராயன் (சிபிஐ), ஆர்.நடராசன் (சிபிஎம்), சின்னராஜ் (கொமதேக), நவாஸ் கனி (இ.யூ.மு.லீ) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.