Skip to main content

ஆசிரியர்களின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவால்!

Published on 22/06/2018 | Edited on 22/06/2018
Bhagawan teacher


அரசு பள்ளிகளில் 'மனசு' வைத்தால் மானிடத்தை புரட்டிப் போட முடியும் என்பதையே ஆசிரியர் 'பகவான்' செயல்பாடு உணர்த்துகிறது. 
 

கடமையை சிறப்புற செய்யும் இவர் போன்றோரின் செயல்கள் இன்று அதிசயங்கள் ஆகிவிட்டது நம் நாட்டில்..! என்றாலும், மகிழ்ச்சியே. பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
 

மற்ற மற்ற ஆசிரியர் பெருமகனார்களுக்கு இது ஒரு சாட்டையடி சம்பவம் மட்டுமல்ல, அவரவர் மனசாட்சிக்கு விடப்பட்ட சவால். 
 

ஆம், ஆசிரியர்கள் தான் மாணவர் எதிர்காலத்தை மட்டுமல்ல, நாட்டையே உருவாக்குவதில் 'பிதா'க்கள் என்பதை இன்றும் உணர்த்திய ஆசிரியர் பகவானுக்கு ஆயிரம் நன்றிகள்!

 

 

 

ஆசிரியர் “பகவான் “
 

தமிழகம் முழுவதும் இன்று ஓர் ஆசிரியரைப் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் கடைசி எல்லை பகுதியான வெளியகரம். இது திருவள்ளூர் மாவட்டத்தின் கடைசி எல்லை பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம். 
 

இந்தக் குக்கிராமத்தில் தெலுங்குதான் தாய் மொழி. இந்த ஊரில் 280 மாணவர்கள் படிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில ஆசிரியராகப் பள்ளிப்பட்டு அடுத்த பொம்ம ராஜிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பி.எட் படித்த 28 வயதான இளைஞன் கோபிந்த் பகவான் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்குச் சேர்ந்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் மாணவர்களிடம் ஆசிரியராக இல்லாமல் பள்ளித் தோழனாகவே பாடம் நடத்தி வந்தார். 
 

ஆங்கிலப் பாடத்தில் அதிக நாட்டம் இல்லாத மாணவர்கள் ஆசிரியர் பகவான் பாடம் நடத்தும் முறையைக் கண்டு வியந்து ஆர்வத்துடன் படித்தனர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஆசிரியரின் ஆங்கிலப் பாடம் கற்றுத்தரும் முறையைக் கண்டு ஆர்வமுடன் படித்தனர். 
 

இந்நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் நடந்தது. அதில் ஆங்கில ஆசிரியர் பகவானுக்கு திருத்தணி அருகில் உள்ள அருங்குளத்துக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது .நேற்று முன்தினம் பள்ளிக்கு வராத பகவான் உத்தரவை வாங்க அலுவலகம் சென்றிருந்தார். ஆசிரியர் வராததைக் கண்டு மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் பள்ளியை அணுகிக் கேட்டபோது பகவானுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்தது தெரியவந்தது. இதைக் கண்டித்து நேற்று மதியம் மாணவர்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பள்ளியையும் பூட்டினர். தங்கள் நண்பனாக விளங்குகிற ஆசிரியர் பகவானை இடமாற்றம் செய்யக் கூடாது என்று மாணவர்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.  
 

அந்த நேரம் பார்த்து பள்ளிக்கு வந்த பகவானை மாணவர்கள் கட்டிப்பிடித்து அழுதனர். ஆசிரியரை மாற்றக் கூடாது என்று தலைமையாசிரியர் அரவிந்த்திடம் மாணவர்களின் பெற்றோர்கள் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 

Bhagawan teacher


 

இதுகுறித்து ஆசிரியர் பகவான் கூறுவது:- மாணவர்களிடம் நான் ஆசிரியராக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. மாணவர்களுடைய எண்ணத்துக்கு ஏற்றாற்போல் பாடம் நடத்துவேன். போரடிக்கிறது என்று சொன்னால் அவர்களுக்குக் கதை சொல்வேன். யாரையும் நான் கண்டிக்க மாட்டேன். யாரையும் அடிக்கவும் மாட்டேன். மாணவர்களுடைய பிறந்தநாள் அல்லது உடல் நலம் சரியில்லாதபோது மாணவர்களுக்குத் தன்னுடைய சொந்த செலவிலேயே அனைத்து உதவிகளையும் செய்து தருவேன். அது தவிர மாணவர்களுக்கு எது தேவையாக இருந்தாலும் என்னிடம் கேட்பார்கள். நான் அவர்களுக்கு அதை வாங்கித் தருவேன். 
 

மாணவர்கள் அவர்களது வீட்டில் எனக்காகவே சமைத்து சாப்பாடு கொண்டு வருவார்கள். அது தவிர மாணவர்களின் வீட்டில் என்ன செய்தாலும் எனக்காகப் பெற்றோர்கள் கொடுத்து அனுப்புவார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த குடும்பங்களிலும் நான் ஒரு குடும்ப உறுப்பினராக விளங்குகிறேன். ஒவ்வொரு குடும்பத்துக்கும் நான் ஒரு பிள்ளையாகவே இருக்கிறேன். 

 

 

 

நான் பள்ளியில் சேர்ந்த 2016-ம் ஆண்டு பவித்ரா என்ற மாணவி ஆங்கிலப் பாடத்தில் 94 மதிப்பெண் உட்பட மொத்தம் 482 மார்க் பெற்றார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருதியே தான் பாடம் நடத்துகிறேன். தினமும் பிரார்த்தனைக் கூட்டத்தில் மாணவர்களுக்கு நீதிக் கதைகளையும் உண்மைச் சம்பவங்களையும் எடுத்துச் சொல்வேன், மாணவர்கள் தீய வழிக்குப் போகாத வகையில் அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். இதனாலேயே மாணவர்களுக்கு என்மீது பாசமும் பற்றும் அதிகமாகின. அதனால்தான் எனக்கும் மாணவர்களை  நிறைய பிடிக்கும். அவர்களும் என்னை ஓர் ஆசிரியராகப் பார்க்காமல் அண்ணன் தம்பியைப் போலவே பார்ப்பார்கள்" என்று சொல்லி முடித்ததும் பகவானின் கண்களில் கண்ணீர் தளும்பியது.  
 

மேலும் கூறுகையில், ``எனக்கும் இந்தப் பள்ளியைவிட்டு வெளியேற ஆசையில்லை. எங்கு சென்றாலும் மாணவர்களின் நலனுக்காகப் பாடுபடுவேன்" எனக்கூறினார். 
 

பகவானை போல மாறுங்கள் ஆசிரியப் பெருமக்களே!


 

Ganamoorthy




 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்