Chairman threatened not to pay wages to sanitation workers

கள்ளக்குறிச்சி நகராட்சியில் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் 150 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கவில்லை என கூறியும் தொடர்ந்து நான்கு மாதங்களாக ஊதியம் சரியான தேதிக்கு வழங்கவில்லை எனவும் தூய்மை பணிகளை பாதியிலே நிறுத்திவிட்டு நகராட்சி ஆணையரிடம் ஊதியம் கேட்பதற்காக நகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.

இதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் இல்லாததால், தூய்மை பணியாளர்களை அழைத்து நகராட்சித் தலைவர் சுப்பராயலு பேசியதாக கூறப்படுகிறது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளதாக தகவல் கிடைத்தைத் தொடர்ந்து, அங்கு சென்று செய்தியாளர்கள் செய்தி சேகரித்தனர். இதனை அறிந்த திமுக நகர சபை தலைவர் சுப்பராயலு, உடனடியாக தூய்மை பணியாளர்களை அழைத்து யார் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தது எனவும், உங்களுக்கு ஊதியம் செய்தியாளர்களே வழங்குவார்கள் எனவும், இதுபோன்ற செய்தால் ஆறு மாதம் ஊதியம் வழங்க முடியாது என மிரட்டும் தோணியில் எச்சரித்துள்ளார்.

மேலும், நிர்வாகம் தான் உங்களுக்குச் சோறு போடுகிறது. செய்தி சோறு போடவில்லை. இதுவே கடைசி எனவும் எச்சரித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம், தூய்மை பணியாளர்களோ எங்களுக்கு சரியான தேதியில் சம்பளம் வழங்கினால் மட்டுமே நாங்கள் கரண்ட் பில் கட்ட முடியும், வீட்டு வாடகை கட்ட முடியும் எனப் புலம்பி வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத நகர மன்ற தலைவர் சுப்பராயலு தூய்மை பணியாளர்களை பார்த்து நீங்கள் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்தால் உங்களை வேலை விட்டுத் தூக்கி விடுவேன் என மிரட்டியதால் தூய்மை பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.