Skip to main content

'ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்'- பாமக அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

'Chairman should be appointed immediately for teacher selection board'- Pmk Anbumani Ramadoss insists

 

'தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை மேற்கொள்ள வேண்டிய  ஆசிரியர் தேர்வு வாரியம் முழுநேர தலைவர் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. ஆசிரியர்கள் நியமனம் சார்ந்த முக்கிய பதவி 3 மாதங்களாக காலியாக இருப்பது கல்வி வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது' என பாமக  தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பது, ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக 1989-ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இல்லாத வகையில் இப்போது ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக பணியாற்றி வந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஜி.லதா, கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகிச் சென்றார். அவருக்கு மாற்றாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமாருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் பதவியே பணிச்சுமை நிறைந்தது. அத்தகைய பதவியில் உள்ள அதிகாரியால் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பணியை கவனித்துக் கொள்ள முடியாது. அதனாலும்,  ஆசிரியர் தேர்வு வாரியத்தில் போதிய எண்ணிக்கையில் அதிகாரிகளும், பணியாளர்களும் இல்லாததால், அதன் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடக்கின்றன.

 

ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் கடந்த மார்ச் 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதன்பின்னர் 10 மாதங்களாகி விட்ட நிலையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு  தகுதி பெறுவதற்கான முதல் தாள் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான இரண்டாம் தாளுக்கான தேர்வு தேதி கூட இன்று வரை அறிவிக்கப்படவில்லை. மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இத்தேர்வுக்கு ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் பின் 8 மாதங்களாக தகுதித்தேர்வை நடத்தாமல் இருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. அதனால், தகுதித் தேர்வின் இரண்டாம் தாளை  எழுத விண்ணப்பித்து விட்டு காத்திருக்கும் 4 லட்சம் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

 

அதேபோல், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5154  பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று 23.06.2022 அன்று தொடக்கக் கல்வித் துறை அறிவித்தது. ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான அறிவிக்கை கூட இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த பணியிடங்களில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் பணிக்காலம் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை இப்போது வெளியிடப்பட்டால் கூட 2023-24ஆம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன் நியமிக்க முடியாது.

 

ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது கணக்கிடப்பட்டு ஓராண்டாகியும் அந்த பணியிடங்களை  நிரப்ப முடியவில்லை என்றால், ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு இருப்பதில் அர்த்தமே இல்லை. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை கடந்த 09.09.2021 அன்று வெளியிடப் பட்டது. அதன்படியான ஆசிரியர்கள் நியமனம் கடந்த நவம்பர் மாத இறுதியில் தான் நிறைவடைந்தது.  இ.ஆ.ப., இ.கா.ப. பணிகளுக்காக குடிமைப்பணி தேர்வுகளே அறிவிக்கை வெளியான நாளிலிருந்து 11 மாதங்களில் நடத்தி முடிக்கப்படும் நிலையில், ஆசிரியர் பணிக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் 15 மாதங்கள் எடுத்துகொள்வது எப்படி சரியாகும்? இந்த தாமதம் போக்கப்பட வேண்டும்.

 

ஆசிரியர் தேர்வு வாரிய விதிகளின்படி அதன் தலைவராக முதன்மை செயலாளர் நிலையில் உள்ள இ.ஆ.ப அதிகாரி தான் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், செயலாளர் நிலையைக் கூட எட்டாத கூடுதல் செயலாளர், சிறப்பு செயலாளர் நிலையில் உள்ள இ.ஆ.ப. அதிகாரிகள் தான் நியமிக்கப்படுகின்றனர். இதுவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளை மந்தமாக்குகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

 

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்கள் தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் உள்ளன. அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் பணியிடங்களுக்கு இணையான ஆசிரியர்களை முன்கூட்டியே தேர்வு செய்து, ஆசிரியர் பணியிடம் காலியான உடன் நியமிக்க வேண்டும். அதற்கு வசதியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு  முதன்மை செயலர் நிலையில் உள்ள அதிகாரியை தலைவராக நியமிக்க அரசு முன்வர வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கூடுதல் அதிகாரிகள், பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்