'Chain Thief Trapped In Hospital' - A Standard Accidental Event

Advertisment

வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றுதப்பிய திருடன் வாகன விபத்தில் சிக்கிய நிலையில் தம்பதியும் திருடனும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூரைச் சேர்ந்த சந்தோஷ்- சுதா தம்பதி குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென பைக்கை உரசுவது போல் வந்ததோடு சுதா அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட சுதா, திருடனுடைய டி-ஷர்டை பிடித்து இழுத்துள்ளார். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு தரப்பினரும் கீழே விழுந்தனர்.

உடனடியாக செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற அந்த நபர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். கீழே விழுந்ததில் காயமடைந்த சுதா மற்றும் சந்தோஷ் இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் தன்னிடம் ஒரு நபர் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றபோது கீழே விழுந்து காயம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல் திருட முயன்ற நபர் சிறிது தூரத்தில் ஏற்பட்ட மற்றொரு வாகன விபத்தில் சிக்கிகாயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அதே கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தன்னிடம் செயின் பறிக்க முயன்ற நபர் விபத்துக்குள்ளாகி அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது சுதாவிற்கு தெரிய வர, அதுகுறித்து போலீசாரிடம் சுதா புகார் அளித்துள்ளார். அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.