Skip to main content

பள்ளி ஆசிரியையிடம் தாலிச் சங்கிலி பறிப்பு... மடக்கிப் பிடித்த போலீஸ்..! 

Published on 21/08/2021 | Edited on 21/08/2021

 

 chain theft from  school teacher  police arrested two

 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த காட்டூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (50). இவர், மணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். சம்பவத்தன்று பஞ்சவர்ணம் அருகில் உள்ள வங்கிக்குச் சென்றுவிட்டு வங்கியின் அருகே இருந்த பழக்கடையில் கொய்யாப்பழம் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அவரது தாலிச் செயினை அறுத்துகொண்டு தப்பியோடினார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த பஞ்சவர்ணம் சத்தம்போட்டிருக்கிறார். ஆனால், பொதுமக்கள் ஒன்று கூடுவதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் அவர் இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தார்.

 

திருவெறும்பூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில், வேங்கூர் பிரிவு ரோடு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்குரிய இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் அரியமங்கலம் பாரதியார் தெருவைச் சேர்ந்த பகதூர்ஷாவின் மகன் பாதுஷா (24) மற்றும் மிலிட்டரி காலனி சுலைமானின் மகன் சிக்கந்தர் பாஷா (25) என்பது தெரியவந்தது.

 

மேலும் விசாரணையில், கடந்த 7ஆம் தேதி நடந்த செயின் பறிப்பில் இவர்களுக்கு சம்பந்தம் உள்ளது எனவும், இரவு நேரங்களில் திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சி மற்றும் கூத்தைப்பார் பேரூராட்சி, பாரதிபுரம் ஆகிய இடங்களில் 4 ஆடுகளைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டதுடன் ஆடுகளையும் உரியவரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 2 பேரையும் கைதுசெய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்