யூடியூப்-ஐ பார்த்து எவ்வாறு நகை பறிப்பது என கற்றுக்கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக நகைப் பறிப்பில் ஈடுபட்ட வந்த பட்டதாரிநபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மாங்காடு பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். நடந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் அப்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. தன்னிடமிருந்து 8 சவரன் நகையை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பறித்துச்சென்றதாக புகார் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதற்காக அந்த பகுதியில் உள்ள 350 க்கு மேற்பட்ட சிசிடிவி காட்சி பதிவுகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை அடிப்படையில் ஆவடி கரிமேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் குணசேகரன் கொடுத்த வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த குணசேகரன் காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் கடன் வாங்கி வீடு ஒன்றை கட்டியுள்ளார். பின்னர் தவணைத்தொகையை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்த குணசேகரன், நகைப் பறிப்பில் ஈடுபடுவது எப்படி? போலீசில் சிக்கிக்கொள்ளாமல் எப்படி நகைப் பறிப்பில் ஈடுபடுவது எப்படி? என்பது தொடர்பாக யூடியூப்-ல் வீடியோக்களை பார்த்து இருக்கிறார். பின்னர் தனியார் நிறுவனத்தில் வேலையைமுடித்துவிட்டு மாலை வேளையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதிகளைப் பார்த்து அந்த பகுதியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க பைக்கின் நம்பர் பிளேட்டை மாற்றி வைத்து பயன்படுத்தி வந்தததுதெரியவந்துள்ளது.