
கடலூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சுபாஷினி. இவர் கடலூரில் நீதிமன்றத்தில் ஊழியராகப் பணி செய்து வருகிறார். கடந்த மே மாதம் 28ஆம் தேதி பணி முடித்து தனது மொபட்டில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுகாசினி கழுத்தில் இருந்த 13 சவரன் தாலிச் செயினைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் சுபாஷினி புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயின் திருடர்களைத் தீவிரமாக தேடிவந்தனர்.
மஞ்ச குப்பத்தைச் சேர்ந்தவர் கஜேந்திர பிரபு, இவர் காவல்துறையில் டி.எஸ்.பி.யாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த மாதம் முப்பதாம் தேதி இரவு வீட்டு வாசலில் நின்றபடியே செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர் ஜெயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.
நெல்லிக்குப்பம் பொதுப்பணித் துறையில் பணி செய்யும்பெண் ஊழியர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி உட்பட இப்படி பல பெண்களிடம் செயின்களை பறித்த மர்மநபர்கள் இருவர் தொடர்ந்து தங்கள் கைவரிசையைக் காட்டி வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. அபினவ் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் செயின் திருடர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர். நேற்று முன்தினம் இரவு கடலூர் பகுதியில் டெல்டா பிரிவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் முரண்பாடாக பேசவே அவர்கள் இருவறையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்தனர்.
அவர்கள் இருவரும் நெய்வேலி அருகே உள்ள பாப்பாங்குளம் பகுதியைச் சேர்ந்த சிவராமன் என்பதும், இவரது நண்பர் அரியலூர் மாவட்டம் காடுவெட்டியைச் சேர்ந்த செல்வம் ஆகிய இருவரும் இணைந்து செயின் பறிப்பு தொழிலைத் தொடர்ந்து செய்து வந்தது தெரியவந்தது.
சிவராமன் மீது சென்னை கேளம்பாக்கம், விழுப்புரம் மாவட்டம் மயிலம், பிரம்மதேசம், கல்பாக்கம், நெய்வேலி, கடம்புலியூர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. செல்வமணி மீது சேத்தியாதோப்பு, சிதம்பரம், மீன்சுருட்டி ,கள்ளக்குறிச்சி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இவர்கள் இருவரும் ஏற்கனவே திருட்டு வழக்குகளில் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் கடலூர் மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் இருபதாம் தேதி இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். வெளியே வந்த உடனே மீண்டும் தங்கள் தொழில் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள். அந்த அடிப்படையில் தான் கடலூர் சுபாஷினி, ஜெயலட்சுமி இருவரிடமும் செயின் பறித்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

அவர்களை கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் டெல்டா படை போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 20 சவரன் நகை ஒரு பல்சர் டூ வீலர் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். வழிப்பறித் திருடர்கள் திருடிவிட்டு போலீஸிடம் பிடிபட்டு ஜெயிலுக்குச் செல்வதும் ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதும் என்பது தொடர் சம்பவங்களாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.