கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள கீழ் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி கொளஞ்சி (70). இவர், பில்லூர் - ஆதனூர் செல்லும் சாலையில் உள்ள தங்களுக்கு சொந்தமான வயலில் வேலை செய்துவிட்டு, நேற்று மதியம் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியில் ஓரிடத்தில் இரண்டு இளைஞர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையோரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
கொளஞ்சி, அவர்களை தாண்டி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த இரண்டு இளைஞர்களும் தலையில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டவர்கள், கொளஞ்சி எதிர்பாராத நிலையில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த இளைஞன் கொளஞ்சி முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடு செயினை பறித்துள்ளார்.
அப்போது தன் செயினைக் கெட்டியாக பிடித்துக்கொண்டு, திருடன் திருடன் என்று கொளஞ்சி கத்திக் கூச்சலிட்டார். அவரின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள்ளாக, ஐந்து பவுன் செயினை அறுத்துக் கொண்டு இரண்டு மர்ம நபர்களும் பைக்கில் தப்பித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ராமநத்தம் காவல் நிலையத்தில் கொளஞ்சி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களைத்தீவிரமாக தேடி வருகிறார்கள்.