




தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. பல இடங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வரும் 24ஆம் தேதி கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்துவந்த பெருமழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. ஓடைகளிலும், ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
இந்நிலையில், மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் தலைமையிலான குழுவினர் சென்னை வந்துள்ளனர். இந்தக் குழுவில் விவசாயம், நிதி, நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் இரண்டாகப் பிரிந்து தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வுசெய்ய இருக்கின்றனர். இன்று (22.11.2021) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், குமரி மாவட்டத்திலும், நாளை தஞ்சை, கடலூர், வேலூர், ராணிப்பேட்டையிலும் ஆய்வு நடைபெறும்.
இன்றும், நாளையும் ஆய்வு நடத்தும் குழுவினர், நவம்பர் 24 அன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இதுகுறித்து ஆலோசிக்க இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மழை வெள்ள பாதிப்பை ஆய்வுசெய்ய சென்னை வந்தடைந்த மத்திய குழு ஆய்வு பணிகளை துவங்கினர். முதற்கட்டமாக இன்று சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள வீராசெட்டி தெரு மற்றும் அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்தனர்.