Skip to main content

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Central Industrial Security Force soldier lost his lives himself

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (38). இவர் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வடமாநிலங்களில் பணிபுரிந்து வந்த குமார், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்திற்கு மாற்றலாகி வந்துள்ளார். அந்த வகையில், இவர் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (12-12-23) இரவு காமராஜர் துறைமுகத்தின் சிக்னல் ஸ்டேஷன் அருகே இவருக்கு பணி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று (13-12-23) அதிகாலை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் குமார், நாற்காலியில் அமர்ந்தபடி ஒரு கையில் துப்பாக்கியுடன் தலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக, இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாதுகாப்பு படை வீரர் குமார் நேற்று முன் தினம் இரவு பணியில் இருந்த போது தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும், குமார் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பணியில் இருந்த போது, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குப்பதிவு முடிந்ததும் தொடங்கிய வன்முறை; மணிப்பூரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Incident at CRPF soldiers in Manipur

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்துக்கு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் 2வது கட்டத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குக்கி இனக்குழு நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 2 பாதுகாப்பு படை வீரர்களை, அங்கிருந்த மற்ற வீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.