Advertisment

“தமிழ்நாட்டின் உரிமைக் குரலை மத்திய அரசு நசுக்க முயற்சிக்கிறது”- துரை வைகோ காட்டம்

central govt is trying to suppress voice of Tamil Nadu rights says Durai Vaiko

Advertisment

நாடாளுமன்ற தொகுதி குறைப்பு என்பது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு இந்திய அரசு அளிக்கும் தண்டனையா? என மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழா, கடந்த 2023 ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை வருங்காலத்தில் அதிகரிப்பதை காணவிருக்கிறோம். ஆகவே, புதிய நாடாளுமன்றத்தை நிர்மாணிப்பது காலத்தின் தேவையாக இருந்தது" என்று குறிப்பிட்டார். பிரதமர் கூறியதைப் போல நாடாளுமன்றத் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால், அது தென் மாநிலங்களுக்குப் பாதகமாக இருக்கும். ஏனெனில் இந்தியாவில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு 1970களில் ஒரு தேசியக் கொள்கையாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதனைச் செயல்படுத்தும் பொறுப்பு மாநிலங்களிடம் விடப்பட்டது.

இக்கொள்கையை மிகச் சரியாக நடைமுறைப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக இருக்கிறது. 2000வது ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கொள்கையின்படி, 2026க்குள் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் மக்கள் தொகை நிலைபெற்றுவிடும் எனக் கருதப்பட்டது. ஆகவேதான், அந்த ஆண்டிற்குப் பிறகு, தொகுதி மறுசீரமைப்புச் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Advertisment

ஆனால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை குறையும். ஒன்றிய அரசு , நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும்போது தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதி எண்ணிக்கையில் 8 தொகுதிகள் குறைந்துவிடும் பேராபத்து இருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் எச்சரிக்கை செய்திருக்கிறார். மேலும் இது குறித்து முடிவு எடுக்க மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் கூட்டி இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.

நாடாளுமன்ற தொகுதி குறைப்பு என்பது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு இந்திய அரசு அளிக்கும் தண்டனையா ? ஒன்றிய பாஜக அரசு, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்பதை கருவியாக கொண்டு கூட்டாட்சித் தத்துவத்திற்கு முடிவுரை எழுதவும், மாநிலங்களின் உரிமை குரலை நசுக்கவும் முயற்சி செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe