central govt should explain about constituency reorganization says Anbumani

Advertisment

மத்திய அரசும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், மக்கள்தொகை அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சமூகநீதியைக் காக்கவும், தொகுதி மறுசீரமைப்பு குறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டவும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள்ளாக சாதிவாரி கணக்கெடுப்பைத் தொடங்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தென்னாட்டு, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் கடந்த ஏப்ரல் 30 ஆம் நாள் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்து நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாக நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்ட போது, இரு காரணங்களுக்காக சமூகநீதி ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகைக்கு இணையாக இடஒதுக்கீடு செய்யப்படும்; 2025 ஆம் ஆண்டிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதன்பின் 2035 ஆம் ஆண்டில் அடுத்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் வரை மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகள் மறுசீரமைக்கப்படாது, அதனால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கைக் குறையாது ஆகியவை தான் அந்த இரு காரணங்களாகும். ஆனால், மத்திய அரசின் அறிவிப்பு மூலம் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வந்த மகிழ்ச்சி மறைந்து மக்களிடம் கலக்கம் ஏற்பட்டிருக்கிறது.

Advertisment

மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதிகள் மறுசீரமைப்பு கடந்த 50 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால், மக்கள்தொகை பெருக்கத்தை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை வெகுவாக குறையும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனை விழுக்காடு உயர்த்தப்படுகிறதோ, அதே அளவில் தமிழகத்திலும் உயர்த்தப்பட வேண்டும் அல்லது தொகுதிகள் மறுசீரமைப்பை கைவிட்டு இப்போதுள்ள நிலையே தொடர அனுமதிக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இது தான் நியாயமானதாகும்.

ஒருவேளை அதற்கு வாய்ப்பில்லை என்றால், 2025 ஆம் ஆண்டிலேயே மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம், தொகுதிகள் மறுசீரமைப்பை 2035 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்க முடியும் என்றும் பா.ம.க. வலியுறுத்தி வந்தது. ஆனால், அதை ஏற்காமல், 2027ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்றால், அதனடிப்படையில் தொகுதிகள் மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படும்; அதனால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கைக் குறையும் என தமிழக மக்கள் அஞ்சுகின்றனர். தமிழக மக்களின் இந்த நியாயமான அச்சத்தைப் போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்.

இன்னொருபுறம் 2027 ஆம் ஆண்டில் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்பதால், 2030 ஆம் ஆண்டு வரை சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை. மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சமூக, கல்விரீதியாக பின்தங்கியுள்ள மக்களின் முழுமையான விவரங்கள் வெளிவராது என்றாலும் கூட, 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது உள்ளிட்ட அவசரக் தேவைகளுக்காவது அந்த விவரங்கள் பயன்படும்.

Advertisment

ஆனால், அந்த விவரங்கள் கூட இன்னும் ஐந்தரை ஆண்டுகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை எனும் சூழலில் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். அந்த வழக்குகளின் விசாரணையின் போது, 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் தேவையாகும்.

மத்திய அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு மாநில அளவிலும் சாதிவாரி சர்வே எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். தேசிய அளவில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு மனித தலைகளை சாதிவாரியாக எண்ணும் நடைமுறை தான். மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை. அதனால் தான் மாநில அளவில் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.

இப்போது மத்திய அரசின் சார்பில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகி விட்ட நிலையில், தமிழக அரசு சூழலின் தீவிரத்தன்மையை புரிந்து கொண்டு, 2008 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும். அதேபோல், மத்திய அரசும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், மக்கள்தொகை அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.