
தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த நவம்பர் மாதம் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதே சமயம் ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கடுமையான மற்றும் வரலாறு காணாத சேதங்களைக் கருத்தில்கொண்டு, 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கத் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.
இருப்பினும் ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க மத்திய அரசு முதற்கட்டமாக 944 கோடியை விடுவித்தது. இந்நிலையில் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடி அரசு ஒரு பாறை போல ஆதரவாக நிற்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய பேரிடர் நிவாரண (NDRF) நிதியின் கீழ் ஆந்திரப் பிரதேசம், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகியவற்றிற்கு ரூ.1554.99 கோடி கூடுதல் நிதி உதவியை இன்று (19.02.2025) அங்கீகரித்துள்ளது. இது மாநில பேரிடர் நிவாரண (SDRF) நிதியின் கீழ் 27 மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்த ரூ.18,322.80 கோடியுடன் கூடுதலாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தை மீண்டும் மத்திய அரசு வஞ்சித்துள்ளதாகவும், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.