ADVERTISEMENT

குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் மத்திய அரசின் மாதிரி பள்ளி! மாணவர்கள் சாலை மறியல்! 

12:33 PM Jul 15, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள ஐவதுகுடி பகுதியில் மத்திய அரசு உதவியுடன் நடத்தப்படும் மாதிரி மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி வளாகத்தில் அரசு அதிகாரிகள் குடி தண்ணீருக்காக அமைத்துள்ள போர்வெல் தண்ணீர் உப்பு தண்ணீராக உள்ளது. அதன் காரணமாக அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் ஐவதுகுடி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து இப்பள்ளி மாணவர்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது அந்த குடிதண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக மாணவர்கள் குடிநீரின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் உட்பட யாரும் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த மாணவர்கள், நேற்று காலை 9 மணி அளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இத்தகவல் அறிந்து வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர். பள்ளி வளாகத்திற்குச் சென்ற வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT