விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், மும்முணை மின்சாரத் திட்டம் ஆகியவற்றை கண்டித்து சி.வெ. கணேசன் எம்.எல்.ஏ கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தாவது, “விவசாயிகள் விளைவித்து உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயம் நலிவடைந்துவருகிறது. ஆகவே விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கினால் பலன் கிடைக்கும் என்ற உயரிய நோக்கத்தோடு விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்ற திட்டத்தை கலைஞர் கொண்டுவந்தார். இதனால் விவசாயிகள் இதுநாள்வரை பலன் அடைந்து வருகிறார்கள். ஆனால், இன்றைய அ.தி.மு.க அரசு விவசாயத்திற்கு வழங்கும் மும்முனை மின்சாரத்திற்கு தனி மின்தடப் பாதை அமைத்துவருகிறது.
இது எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு பேரிடியாக அமையும். மத்திய அரசின் கட்டளைக்குப் பணிந்து, விவசாயத்திற்கு வழங்கும் மும்முனை மின்சாரத்தை, தனி உயரழுத்த மின்பாதை அமைத்து துரோகம் இழைக்க முயற்சிக்கிறதுதமிழக அரசு.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு வழங்கும் இலவச மின்சாரத்தை மாற்றி கட்டணம் வசூலிக்கவும், ஒருநாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கவும்,இருமுனை மின்சாரத்தை முழுவதுமாக நிறுத்தவும். விவசாயத்திற்கு வழங்கும் இலவச மின்சாரத்தை அளவீடு செய்து கூடுதல் கட்டணம்வசூல்செய்யவும் மத்திய மாநில அரசுகள் மறைமுகநடவடிக்கையை எடுத்து வருகின்றன.
உதாரணமாக, கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி, பெண்ணாடம் 110 KV, SS -இல் இருந்து மருதத்தூர் வழியாக தனி உயரழுத்த மின்பாதையில் மின்சாரம் வழங்குகப்படுகிறது. இதில், ஒருநாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. மற்ற நேரங்களில் மின்இணைப்பு வழங்குவதில்லை. இதனால் கொத்தட்டை, அருகேரி, நந்திமங்கலம், கோனூர், வடகரை, மேலூர், மருதத்தூர், டி. அகரம், கொல்லதங்குறிச்சி, வடகரை போன்ற 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், கரும்பு போன்ற விவசாயப் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைப்போன்று நாடு முழுதும் உயரழுத்த மின்சாரத்திற்கு, தனி மின்பாதை அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் முழுமையாக நிறைவடையும் போது,'விவசாயஇலவச மின்சாரம் ரத்து' என்கிற அதிர்ச்சியை விவசாயிகளுக்கு கொடுப்பார்கள். ஆகவே கலைஞர் கொண்டுவந்த இலவச மின்சாரத்தை நிறுத்தத் துடிக்கும் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சிப்பதை இனியாவது நிறுத்திக் கொள்ளவேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்போது விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை மீண்டும் கொண்டு வருவோம் என இந்த மக்கள் விரோத அரசை எச்சரிக்கிறோம்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.