/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sanmugam.jpg)
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை: ’’காவிரி தீர்ப்பை அமல்படுத்துவதற்கு காலஅவகாசம் கேட்டு மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மே-3ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது. செயல்திட்டத்தை மே மாதம் 3ந் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு, தமிழக அரசு, உச்சநீதிமன்றம் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றம் கெடுவிதித்த காலத்திற்குள் தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசை ஏன் என்று கேள்வி எழுப்பக்கூட உச்சநீதிமன்றம் தயாராக இல்லை. அதே நேரத்தில் மத்திய அரசு கோரிய கால அவகாசம் ஏறத்தாழ வழங்கப்பட்டுள்ளது.
நடுவர்மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்குரிய தண்ணீரை வழங்க வேண்டுமென்று கர்நாடகத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்து கடந்த 10 ஆண்டு காலத்திற்குள் எத்தனையோ உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆனால், கர்நாடக மாநில அரசு எந்தவொரு உத்தரவையும் மதித்து அமல்படுத்தவில்லை என்பதே உண்மை. எனவே, இப்போதைய உத்தரவினால் தமிழகத்திற்கு நல்லது எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கருதுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிடும் என்று எதிர்பார்த்திருந்த தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவே உச்சநீதிமன்றத்தின் இன்றைய நடவடிக்கைகள் அமைந்துள்ளது என்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.’’
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)