Skip to main content

“மருத்துவ இட ஒதுக்கீடு குறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்” - உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

"central Government should inform the position on medical reservation" - High Court order

 

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டை 2021 - 22 கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்க மத்திய அரசு மேலும் ஒருவார காலம் அவகாசம் கேட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வுசெய்து, 2021 - 22 கல்வியாண்டு முதல் அமல்படுத்த  வேண்டும் என உத்தரவிட்டது.

 

அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பரிந்துரை அளித்தும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைக் காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டை 2021 - 22 கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு, அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 26ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர். இந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில் நிலைப்பாட்டைத் தெரிவிக்க மேலும் ஒருவார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரம் திங்கட்கிழமை ஒத்திவைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்