Skip to main content

“மத்திய அரசு தயாராக உள்ளது” - ஆளுநர் ஆர்.என். ரவி

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Central Government is ready Governor RN Ravi on rescue and relief work

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதே சமயம் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் 4வது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கக் கோரவும், தற்போது பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதி இருந்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை பிரதமர் மோடி இன்று இரவு 10.30 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் பிரதமர் மோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்து நிதி ஒதுக்க வலியுறுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Central Government is ready Governor RN Ravi

இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், ஆளுநர் தமிழ்நாட்டில் பல அலுவலர்களை வைத்து கூட்டங்களை நடத்தி வருவது குறித்தும், இதற்கு பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருவது பற்றியும் கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர், “கொரோனா போன்ற பேரிடர் ஏற்பட்டபோது, பிரதமர்தான் ஆலோசனை கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளை வழங்கி கொண்டிருந்தார். அப்போது குடியரசுத் தலைவர் ஏதாவது செய்திருந்தால், என்ன ரியாக்‌ஷன் வருமோ. அதே ரியாக்‌ஷன் தான் இப்போது” எனத் தெரிவித்திருந்தார்.

Central Government is ready Governor RN Ravi

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரணப் பணிகளை ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார். இது குறித்து ராஜ்பவன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசியப் பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எஃப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமானப் போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ) மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மழை வெள்ள பாதிப்பால் குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசுத் துறைகள் அவற்றின் வளங்களை மாநில அரசு அழைத்தவுடன் பணியாற்றும் வகையில் தயாராக வைத்துள்ளன. மேலும் மாநில அரசால் கோரப்படும்போது அவை பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவின்படியும் தேவைக்கேற்ப இயன்ற வகையில் சொந்தமாகவும் அவை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்றன.

Central Government is ready Governor RN Ravi

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால், எத்தனை வளங்கள் சரியாக தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவற்று உள்ளதாக கவலை தெரிவித்தன. தற்போதுள்ள மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூடுதல் வளங்களை கையிருப்பில் வைத்திருக்குமாறு அவர்களை ஆளுநர் கேட்டுக் கொண்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கள்ளச்சாராய கோர மரணங்கள்: முதலமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்” - த.மா.கா

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Chief Minister should take responsibility for kallakurichi incident says tmc

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும்மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்தச் சம்பவத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி மாநில தலைவர் ஈரோடு யுவராஜா வெளியிட்டுயுள்ள அறிக்கையில், “தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். ஏறக்குறைய 133 பேர் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டனர். அதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தமிழக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விஷ சாராயம் குடித்தவுடன் இரண்டு பேர் உயிரிழந்தனர். அந்தத் துக்க நிகழ்வில் பங்கேற்ற பலரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். ஆனால் நேற்று மாவட்ட கலெக்டர் ஷர்வன்குமார் இரண்டு நபர் இறந்தவுடன் அது கள்ளச்சாராயத்தால் அல்ல என்று கூறினார்.

வாந்தி மயக்கத்தால் என அறிவித்ததைத் தொடர்ந்து மேலும் பலர் கள்ளச்சாராயம் அருந்தி இறந்துள்ளனர். கள்ளச்சாராயம் அருந்தி கண் பார்வை பாதிக்கப்பட்டனர். ரத்த வாந்தி எடுத்தனர் என்ற தகவல் அறிந்த பிறகும் பலர் கள்ளச்சாரத்தை அருந்தி உள்ளனர். மெத்தனால் (தொழிற்சாலைகளுக்கு பயன்படுவது-விஷம்) என்ற விஷ சாராயம் அங்கு எப்படி வந்தது. எவ்வாறு பாக்கெட் சாராயம்  விற்பனை செய்யப்பட்டது. போலீசார் வருவாய்த்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?  பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது ஏற்கெனவே இது குறித்து தகவல் அளிக்கப்பட்டும் போலீசார் நடவடிக்கை இல்லை என்று கூறுகின்றனர். முதல்வர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மதுவிலக்கு போலீசார், எஸ்.பி, கலெக்டர் மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் இது போதாது. கள்ளக்குறிச்சி நகர பகுதியிலேயே இது நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள அதிகாரிகள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் பிற இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கும்.  தற்காலிக இடமாற்றம் பணியிடை நீக்கம் என்பது தீர்வாகாது.

கடந்த ஆண்டு விழுப்புரம் மரக்காணம் செங்கல்பட்டு பகுதிகளில் இதே போன்ற கள்ளச்சாராயம் மரணம் ஏற்பட்டது. 23-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் ஆளுங்கட்சி சேர்ந்த சிலருக்கும் கள்ளச்சாராய விற்பனையில்  இருந்ததாக கூறப்பட்டது. அப்போது முதல்வர் மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு வாரமும் கள்ளச்சாராயம் குறித்த ஆய்வுகள் நடத்தி அறிக்கை அனுப்ப வேண்டும். பொதுமக்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கவனக்குறைவாக இருக்கும் காவல்துறை நம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் குறித்து பொதுமக்கள் 10581 க்கு போன் செய்து தகவல் அளிக்கலாம் என்றெல்லாம் அறிவித்தார்.

அப்போதே கள்ளச்சாராயம் குறித்து கடும் நடவடிக்கை தொடர்ந்து இருந்தால் இப்போது இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்காது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் ஏழை கூலி தொழிலாளிகள். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இரண்டு முறை டாஸ்மாக் மதுவின் விலையை உயர்த்தி உள்ளது. எனவே குறைந்தபட்சம் ரூபாய் 200 இருந்தால் மட்டுமே குறைந்த அளவு குடிக்க முடியும். இந்த விலை ஏற்றமும் பலரை கள்ள மதுவை நாடிச் செல்ல செய்துள்ளது என்பது வேதனைக்குரியது. மது விற்பனை செய்த பகுதி அருகிலேயே காவல் நிலையமும் உள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதைத் தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் ஆளும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே டாஸ்மாக் மது விற்கப்படுவதாக அரசு கூறி வருகிறது ஆனாலும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதை கட்டுப்படுத்த முடியாத அரசாக ஆளும் திமுக அரசு உள்ளது. கள்ளச்சாராயம் விற்பனைக்கும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

1937 இல் அப்போதைய முதல்வர் ராஜாஜி சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்படுத்தினார். 1948 இல் அப்போதைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழகத்தில் மதுவிலக்கை அமலாக்கினார். ஆனால் 23 ஆண்டுகள் அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. மதுவை மறந்திருந்த மக்கள் மதுவுக்கு அடிமையாகினர். இன்று 6000 க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. அரசு ஆண்டுக்கு ரூபாய் 50,000 கோடி இதன் மூலம் வருமானம் பெறுகிறது. மது விலை உயர்வு காரணமாக மக்கள் கள்ள சாராயத்தையும் கஞ்சாவையும் நாடுகின்றனர்.

பொதுவாக மதுவிலக்கை வலியுறுத்தும் போதெல்லாம் கள்ளச்சாராய சாவுகள் ஏற்படும் என்று அரசு கூறி வந்தது. ஆனால் மதுவிலக்குத் துறை அமைச்சரே மது விற்பனைக்கும் பொறுப்பேற்கிறார் என்பது விந்தையானது. மதுவிலக்கு துறை போலீசார் என ஏராளமானோர் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். டாஸ்மாக் மது (எத்தனால்) கிடைத்த போதும் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. எனவே இதில் ஆளுங்கட்சியினர் போலீசார் வருவாய்த்துறையினர் மற்றும் அதிகாரிகள் தொடர்பு இருப்பதாக மக்கள் சந்தேகிக்கலாம். ஒட்டுமொத்தமாக இந்த அரசு இந்தக் கள்ள சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். என அவரது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Next Story

“கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று” - முதல்வர் வேதனை

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
CM Agonied Kallakurichi incident is something that should not have happened

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்து பலியானோரின் எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வேதனையைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அத்தனையையும் கண்காணித்து வருகிறேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளேன். அமைச்சர்கள், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் சென்று நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றனர்.

இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க   மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.