
கண்ணுக்குத் தெரியாத கொடிய கரோனாவின் 2ஆம் அலையின் தாக்குதல், முதல் அலையைக் காட்டிலும் உக்கிரமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அதற்கேற்ப கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அன்றாடம் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, போதிய படுக்கையின்மை காரணமாக அரசு மருத்துவமனைகளில் தரையில் படுக்கவைத்து சிகிச்சையளிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பாளை அரசு மருத்துவமனையும் விதிவிலக்கல்ல.
எனவே அவசரகால நிலையைக் கருத்தில்கொண்டு அரசு மருத்துவமனை மட்டுமல்லாமல், மாவட்டத்தின் ஊரகப் பகுதியில் உள்ள கூடன்குளம் அரசு மருத்துவமனைகள் போன்றவை கோவிட்-19 மையங்களாக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் புதிய தொற்றாளர்களின் வரத்துக்கள் குறைந்தபாடில்லை. எனவே தற்போது நெல்லை மாவட்டத்தின் முக்கூடல் நகரில் பீடித் தொழிலாளர்களின் சுகாதார நலன் பொருட்டு, 200 படுக்கைகளுடன் இயங்கிவரும் மத்திய அரசின் சுகாதார நிலையத்தை கோவிட் – 19 சிகிச்சை மையமாக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் வேகமெடுத்திருக்கின்றன.
பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்களால் மருத்துவமனை சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக சுமார் 105க்கும் மேற்பட்ட மார்பில் கல், டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு தரம் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த பீடித் தொழிலாளர்களுக்கான மருத்துவமனையின் ஒவ்வொரு அறையும் 3 பேர் தங்கும் வசதிகளைக்கொண்டது. அதனால் இந்த மருத்துவமனையில் கரோனா தொற்றாளர்களுக்காக சுமார் 175 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, ஆக்சிஜன் சிலிண்டர்களும் 30 நீராவி பிடிக்கும் இயந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 6க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 15க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆகியோர் இந்த மையத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அரசு வட்டாரங்கள், இன்னும் ஒரு வாரத்தில் முக்கூடல் கோவிட் மையம் திறக்கப்படலாம் என்கிறார்கள். இன்று (19.05.2021) அமைச்சர் தங்கம் தென்னரசு இம்மையத்தை ஆய்வுசெய்தார்.