/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thangam-thennarasu-file-1_1.jpg)
இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் (1823 - 2023) ஆவதை நினைவுகூரும் வகையிலும், அவர்கள் இலங்கைக்கு ஆற்றிய சேவைகளையும், இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய பங்களிப்பைப் பாராட்டியும் இலங்கை மத்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்பாடு செய்த'நாம் 200' என்ற தலைப்பிலான தேசிய நிகழ்வுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை அனுப்பி வைத்திருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் முதல்வரின் உரை புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இது குறித்து பேசுகையில், “மலையக தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இயலாத நிலையில் அவருக்கு பதிலாக தமிழ்நாட்டு அரசின் பிரதிநிதியாக நான் பங்கேற்க இருந்தேன். இலங்கை செல்வதற்கு மத்திய அரசின் வெளியுறவுத்துறை உரிய அனுமதி கொடுக்காததால், எனது பயண ஏற்பாட்டை ரத்து செய்துவிட்டேன். மத்திய அரசிடம் இருந்து அனுமதி முந்தைய நாள் இரவு வரை கிடைக்கவில்லை. நவம்பர் 2 ஆம் தேதி விழாவுக்கு நவம்பர் 1 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
என்னுடைய பயணத்தை ரத்து செய்த நிலையில், மத்திய அரசிடம் அனுமதி கிடைத்தது. மத்திய அரசு அனுமதி வழங்க தாமதித்ததால் இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்து விட்டேன். இலங்கையில் உள்ள விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டு கொண்டதன் பேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பினார். ஆனால், விழாவில் அந்த வாழ்த்து செய்தி ஒளிபரப்புசெய்யாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை” என தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)