Advertisment

“மத்திய அரசு தவறான தகவலை தெரிவித்துள்ளது” - அமைச்சர் துரைமுருகன் காட்டம்!

central government has given wrong information Minister Durai Murugan

Advertisment

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு அப்பகுதியில் கடந்த 29ஆம் தேதி (29.11.2024) கடையடைப்பு போராட்டமும் நடத்தினர்.

அதே சமயம் டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து மேலூரில் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் அமைச்சர் மூர்த்தி, “டங்ஸ்டன் சுரங்க ஆய்வுக்கு கூட தமிழக அரசு அனுமதிக்காது” என உறுதி அளித்துள்ளார். இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடந்த 28 ஆம் தேதி (28-11-2024) கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், “தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு உரிமம் அளித்துள்ளது. இந்த கிராமங்களில் வாழக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதரம் இந்த சுரங்கப் பணிகளால் பாதிக்கப்படும் என்பதால், இந்தப் பகுதி மக்கள் இதை எதிர்த்து போராட்டங்களை மேற்கொண்டனர். இந்த நிலையில், மேலூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய எந்த சுரங்கப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்று உறுதியளித்து, இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட சுரங்க உரிமத்தை இரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

இதனை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அப்பகுதி மக்களும் தமது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த உறுதியான நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதை சகிக்க முடியாத சிலர், மத்திய அரசின் இந்த சுரங்க உரிமத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததாக, விஷமத்தனமான வதந்திகளை பரப்பி வருகின்றனர். மேலும், இந்த உரிமத்தை வழங்குவதற்கு முன்பாக மாநில அரசின் கருத்துக்களைப் பெற்றதாக மத்திய அரசும் தவறான தகவலை தெரிவித்துள்ளது. இது குறித்த உண்மை நிலையை விளக்கிட விரும்புகின்றேன். கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், முக்கிய கனிமவளங்களை ஏலம் விடுவது தொடர்பாக கனிமக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய அரசு தெரிவித்த உடனேயே, 03.10.2023 நாளன்று. மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பினை தெளிவாக தெரிவித்தேன்.

central government has given wrong information Minister Durai Murugan

ஆனால், 02.11.2023 அன்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர் இதற்கு அளித்த பதிலில், உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்ட பிறகே இந்த ஏலம் விடப்படுவதாகவும், தேசிய அளவிலான தேவைகளை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் இந்த கொள்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு நமது எதிர்ப்புகளை நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து மதுரை மேலூர் பகுதியில் உள்ள நிலங்களைப் பற்றிய விவரங்கள் மத்திய அரசால் கேட்கப்பட்ட போதும், உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள அரிட்டாபட்டி பகுதியானது ஒரு பல்லுயிர் பெருக்க வரலாற்றுத் தலம் என்பதை சுட்டிக்காட்டினோம். இவை எவற்றையுமே கருத்தில் கொள்ளாத மத்திய அரசு ஏலம் விட்டு டங்ஸ்டன் உரிமத்தை மேற்கூறிய நிறுவனத்திற்கு அளித்தது. இன்று மக்களுடைய எதிர்ப்பையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உறுதியான நிலைப்பாட்டினையும் கண்டு மிரண்டு, மத்திய அரசும், அதனோடு சேர்ந்து இரட்டை வேடம் போடக்கூடிய எதிர்க்கட்சிகளும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த சுரங்க ஏலத்துக்கு தமிழ்நாடு அரசு தனது ஒப்புதலை தெரிவித்ததாக பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன. இவை எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.

madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe