The central government has accepted the stand of the Tamil Nadu government

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சரக்கு மற்றும் சேவைகள் வரிகளின் கவுன்சில் தலைவர் ஆகியோர் தலைமையில் நேற்று (02.08.2023) 51 வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி கவுன்சில் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இணைய வழியாக கலந்து கொண்டார்.

Advertisment

இந்தக் கூட்டத்தின்போது இணையவழி விடுதிகள், விளையாட்டுக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றின் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவு குறித்துவிவாதிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் சமீபத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை கருத்தில் கொண்டு, இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்துக்களை தெரிவித்தார்.

Advertisment

இந்தக் கூட்டத்தின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு, “இணையவழி சூதாட்டம் அதாவது இணையவழி பந்தயம், பணம் அல்லது பிற ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுகள் மற்றும் குறிப்பிட்ட இணையவழி விளையாட்டுகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுவதால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள்அத்தகைய மாநில சட்டங்களுக்கு இணக்கமான முறையில் அமைய வேண்டும். சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் குறிப்பிட்ட கூறுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இணையவழிப் பண விளையாட்டுக்கான சட்ட வரையறையில், தற்போது நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டம், அல்லது அதன் கீழ் தடை செய்யப்பட்ட அல்லது வாய்ப்பின் அடிப்படையில் செயல்திறன் அல்லது விளைவுகள் இருக்கும் விளையாட்டுகளை கொண்டுவரக்கூடாது. மேற்கூறிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்த வரைவில் சேர்க்கப்பட வேண்டும்” எனத்தெரிவித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு, தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள சரக்கு மற்றும் சேவை கவுன்சிலால் ஏற்றுக்கொள்ள உறுதியளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிக வரி ஆணையர் தீரஜ் குமார் மற்றும் வணிக வரித் துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.