மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வகைப் பணியாளர் தேர்வுகளும், ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வுகளும் இனி தமிழ் உள்ளிட்ட13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருப்பதாவது; “மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (Staff Selection Commission - SSC) பல்வகைப் பணியாளர் தேர்வுகளும், ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வுகளும் இனி தமிழ் உள்ளிட்ட13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
மத்திய அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளையும், நுழைவுத் தேர்வுகளையும் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. அதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான உறுதிமொழிகளைப் பெற்றுக் கொடுத்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ் மொழியில் போட்டித் தேர்வு கனவு நனவானதில் மகிழ்ச்சி.
தமிழ் மொழியின் உரிமைகளை ஒவ்வொன்றாகப்போராடிப் பெறும் நிலை கூடாது. அன்னைத் தமிழ் மொழிக்கு அதற்குரிய அனைத்து உரிமைகளும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும். அதற்காகத் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் மத்திய அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடைவதற்காகப் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்; வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.