
தமிழ்நாட்டில் கடந்த வாரம் பெய்த வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்பு பெரிய அளவில் இருந்தது. குறிப்பாக, சென்னையில் மழை ருத்ரதாண்டவம் ஆடியது. 10க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியதால் பல இடங்களில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஒருவாரத்திற்கும் மேலாக சென்னை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலைமை சீரடைந்துவருகிறது. இருந்தும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் மக்கள் சிரமத்துடனே அன்றாட வேலைகளைக் கவனித்துவருகிறார்கள்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மழை பாதிப்பை ஆய்வுசெய்ய வந்த மத்திய அரசு நியமித்த குழுவினர், இன்று (22.11.2021) காலை சென்னையில் தங்களுடைய ஆய்வைத் தொடங்கினர். சென்னை புளியந்தோப்பில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சுக்லா தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை செய்துவருகிறார்கள். சென்னையில் ஆய்வை முடித்ததும் மத்திய குழுவினர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் ஆய்வுசெய்ய உள்ளனர். விரைவில் மத்திய அரசிடம் தங்கள் ஆய்வறிக்கையை ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.