Central and State Governments ordered to respond in the case of requesting a hearing meeting!

சென்னை காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் தொடர்பாக,மீனவர்கள் அணுகக்கூடிய பகுதிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தக் கோரிய வழக்கில்,மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாரம்பரிய மீன்பிடிப்போர் சங்கத்தின் தலைவர் எத்திராஜ் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின்படி, தனியார் நிறுவனத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கத்தால் பாதிக்கப்படக்கூடியஅருகில் வசிப்பவர்களிடம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும்.ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை, பொதுமக்கள் எளிதில் சென்று வர முடியாத,20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீஞ்சூரில் நடத்துவதாக அறிவித்துள்ளது.

Advertisment

இந்த விரிவாக்கத்தால், துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள எங்கள் அரங்கன்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும், இதனால் ஏற்படக்கூடிய கடல் அரிப்பால், கடலோர கிராமங்கள் காணாமல் போகும். கடந்த 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் அடிப்படையில், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை அருகிலேயே நடத்த, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு, தமிழக அரசு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளிவைத்தது.