Skip to main content

மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு: பினாமி அரசின் உறக்கம் கலையுமா? ராமதாஸ் கேள்வி

Published on 21/03/2018 | Edited on 21/03/2018


காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும், உச்சநீதிமன்றம் விதித்தக் கெடுவின்படி இம்மாத இறுதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கூறியிருக்கிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி மேலாண்மை வாரியத்தை இம்மாத இறுதிக்குள் அமைக்க முடியாது என்று நீர்வளத்துறை செயலாளர் கூறியிருப்பதில் புதிதாக எதுவும் இல்லை. கடந்த மாதம் சென்னை வந்த மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்ததைத் தான் அவரது அமைச்சகத்தின் செயலாளர் மீண்டும் கூறியிருக்கிறார். இதன்மூலம் தெரியவருவது என்னவென்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் கடந்த ஒரு மாதமாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை; மாறாக இந்தப் பிரச்சினையில் நிலைமை மேலும் குழப்பமடைந்திருக்கிறது என்பது தான். காரணம், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பு காவிரி மேலாண்மை வாரியம் தான் என்று நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றன. ஆனால், மத்திய நீர்வளத்துறை செயலாளரோ நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பு மேலாண்மை வாரியமாகவும் இருக்கலாம் அல்லது வேறு அமைப்பாகவும் இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இது தமிழகத்தை ஏமாற்றும் முயற்சியாகும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை இம்மாத இறுதிக்குள் அமைக்க முடியாது என்பதை காலந்தாழ்த்தும் முயற்சியாக மட்டுமே பார்க்க முடியாது; நிரந்தரமாகவே முடக்கும் முயற்சியாகத் தான் பார்க்க வேண்டும். ஏனெனில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அடுத்தக்கட்டமாக தேர்தல் ஆணையத்தின் மூலமாக முட்டுக்கட்டை தயாராகி வருகிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அட்டவணையை வரும் 24 அல்லது 25-ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அவ்வாறு அடுத்த சில நாட்களில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டால் அதைக் காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு அடுத்த சில மாதங்களுக்கு கிடப்பில் போட்டு விடும்.

2013-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் அதைக் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகளை முடக்கும் நடவடிக்கைகளை அப்போதைய காங்கிரஸ் அரசு செய்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்ற ஆணைப்படி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், அடுத்ததாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்பட்டது. ஆனால், கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்படும் வரை காத்திருந்த மத்திய அரசு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ‘‘கர்நாடக மாநில தேர்தல் நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கலாமா?’’ என்று கேட்டு 16.4.2013 அன்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது. இதற்கு 29.4.2013 அன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம், ‘‘கர்நாடக மாநில தேர்தல் முடியும் வரை, அதாவது 5.5.2013 வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டாம்’’ என்று உத்தரவிட்டது. அன்று கைவிடப்பட்ட காவிரி வாரியம் இன்றுவரை அமைக்கப்படவே இல்லை.

இப்போதும் அதே உத்தியைக் கடைபிடிக்க மத்திய அரசு முயலுகிறது. இந்த தந்திரத்தை தமிழக அரசு உணர்ந்து கொண்டு சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாறாக 29&ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது; அதுவரை காத்திருப்போம் என்று தமிழக ஆட்சியாளர்கள் கூறினால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்காக தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் நிரந்தரமாக காத்திருக்கும் நிலை ஏற்படும்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் அறிவிப்பு வெளியிடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்